புதன், 8 ஜூலை, 2020

மஹாபாரதம் - +/- 17 மஹாப்ரஸ்தானிக பர்வம் 1-3 +/- 18 ஸ்வர்க்காரோஹணிக பர்வம் 1-6

Radhe Krishna 09-07-2020

பொருளடக்கம்



+/- 10 சௌப்திக பர்வம் 001-018
+/- 11 ஸ்திரீ பர்வம் 001-027
+/- 12 சாந்தி பர்வம் 001-365

+/- 13 அநுசாஸன பர்வம் 001-168

+/- 14 அஸ்வமேத பர்வம் 01-92

+/- 15 ஆஸ்ரமவாஸிக பர்வம் 01-39

+/- 16 மௌஸல பர்வம் 1-8

+/- 17 மஹாப்ரஸ்தானிக பர்வம் 1-3

+/- 18 ஸ்வர்க்காரோஹணிக பர்வம் 1-6

மஹாபாரதம்




























































































































































































































































































































நெடும்பயணம்! - மஹாப்ரஸ்தானிகபர்வம் பகுதி – 1




ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "விருஷ்ணி மற்றும் அந்தகக் குல வீரர்களுக்கிடையில் இரும்பு உலக்கைகளை {முசலங்களைக்} கொண்டு நடந்த மோதலைக் கேட்டும், கிருஷ்ணன் சொர்க்கத்திற்கு உயர்ந்ததை அறிந்து கொண்டும் பாண்டவர்கள் என்ன செய்தனர்?" என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "விருஷ்ணிகளின் பெரும் படுகொலையைக் குறித்துக் கேட்ட கௌரவ மன்னன் {யுதிஷ்டிரன்} உலகை விட்டுச் செல்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான். அவன் அர்ஜுனனிடம்,(2) "ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, காலன் (தன் கொதிகலனில்) அனைத்து உயிரினங்களையும் சமைக்கிறான். (எது நம் அனைவரையும் கட்டுகிறதோ அந்தக்) காலப் பாசத்தினாலேயே {கயிறுகளாலேயே} இது நடந்திருக்கிறது என நான் நினைக்கிறேன். இதைக் காண்பதே உனக்கும் தகும்" என்றான்.(3)


அண்ணனால் {யுதிஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, "காலன், காலன்" என்ற சொல்லை மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லி, பெரும் நுண்ணறிவைக் கொண்ட தன் அண்ணனின் கருத்தை முழுமையாக ஏற்றான்.(4) அர்ஜுனனின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட பீமசேனனும், இரட்டையர்களும் {நகுல சகாதேவர்களும்}, அர்ஜுனன் சொன்ன சொற்களை முழுமையாக ஏற்றுக் கொண்டனர்.(5) தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவதற்காக இவ்வுலகில் இருந்து ஓயத் தீர்மானித்த அவர்கள் யுயுத்சுவைத் தங்கள் முன் கொண்டு வந்தனர். யுதிஷ்டிரன் தன் பெரியதந்தைக்கு {திருதராஷ்டிரனுக்கு} அவரது வைசிய மனைவியின் மூலம் பிறந்த மகனிடம் {யுயுத்சுவிடம்} நாட்டை ஒப்படைத்தான்.(6)

பரிக்ஷித்தை அரியணையில் நிறுவியவனும், பாண்டவர்களில் மூத்த சகோதரனுமான மன்னன் {யுதிஷ்டிரன்}, கவலையால் நிறைந்தவனாக, சுபத்திரையிடம்,(7) "உன்னுடைய மகனின் மகனான இவனே குருக்களின் மன்னனாக இருப்பான்.(8) பரிக்ஷித் ஹஸ்தினாபுரத்தை ஆள்வான், அதே வேளையில் யாதவ இளவரசனான வஜ்ரன் சக்ரப்ரஸ்தத்தை ஆள்வான். இவன் உன்னால் பாதுகாக்கப்பட வேண்டும். ஒருபோதும் அநீதியில் உன் இதயத்தை நிலைக்கச் செய்துவிடாதே {அதர்மத்தில் மனத்தைச் செலுத்தாதே}" என்றான்.(9)

நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, தன் சகோதரர்களுடன் சேர்ந்து, பெரும் நுண்ணறிவைக் கொண்ட வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, முதியவரான தங்கள் தாய்மாமனுக்கும் {வசுதேவருக்கும்}, ராமருக்கும் {பலராமருக்கும்}, பிறருக்கும் முறையாக ஆகுதிகளைக் காணிக்கையாக்கினான். பிறகு அவன் இறந்து போன தன் உற்றார் உறவினர் அனைவருக்கும் முறையாகச் சிராத்தங்களைச் செய்தான்.(10,11)

மன்னன், ஹரியைக் கௌரவிப்பதற்காக அவனுடைய பெயரை மீண்டும் மீண்டும் சொல்லி, தீவில் பிறந்தவரான வியாசர், நாரதர், தவச் செல்வத்தைக் கொண்ட மார்க்கண்டேயர், பரத்வாஜ குலத்தின் யாஜ்ஞவல்கியர் ஆகியோருக்கு இனிய உணவு வகைகளைப் படைத்தான்.(12) கிருஷ்ணனைக் கௌரவிப்பதற்காக அவன் பல ரத்தினங்களையும், ஆடைகளையும், துணிமணிகளையும், கிராமங்களையும், குதிரைகளையும், தேர்களையும்,(13) பெண் பணியாட்களையும் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் பிராமணர்களில் முதன்மையானோருக்குக் கொடையளித்தான். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, குடிமக்களை அழைத்து, கிருபரை ஆசானாக நிறுவி, பரிக்ஷித் அவரது சீடனாக்கப்பட்டான். பிறகு மீண்டும் யுதிஷ்டிரன் தன் குடிமக்களை அழைத்தான்.(14,15) அந்த அரசமுனி தன் நோக்கங்களை அவர்களுக்குத் தெரிவித்தான். குடிமக்களும், மாகாணவாசிகளும் மன்னனின் சொற்களைக் கேட்டு,(16) கவலையால் நிறைந்தவர்களாக அவற்றை அங்கீகரிக்காமல் இருந்தனர். "ஒருபோதும் இது நடக்காது" என்று அவர்கள் மன்னனிடம் சொன்னார்கள்.(17)

காலம் கொண்டுவரும் மாற்றங்களை நன்கறிந்தவனான அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} அவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்கவில்லை. அற ஆன்மா கொண்ட அவன் தன் கருத்துகளை அங்கீகரிக்குமாறு மக்களை ஏற்கச் செய்தான்.(18) பிறகு அவன் உலகத்தைவிட்டுச் செல்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான். அவனது சகோதரர்களும் அதே தீர்மானத்தையே எடுத்திருந்தனர். பிறகு, தர்மனின் மகனும், குருக்களின் மன்னனுமான யுதிஷ்டிரன்,(19) தன் ஆபரணங்களை அகற்றி, மரவுரிகளைத் தரித்தான். பீமன், அர்ஜுனன், இரட்டையர் மற்றும் பெரும்புகழைக் கொண்ட திரௌபதி ஆகியோரும்,(20) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அதே போலவே மரவுரிகளையே உடுத்திக் கொண்டனர்.

ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, தங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அருளை வழங்கவல்ல தொடக்க அறச் சடங்குகளைச் செய்த அந்த முதன்மையான மனிதர்கள் தங்கள் புனித நெருப்புகளை நீருக்குள் விட்டனர். அந்த இளவரசர்களை அந்தத் தோற்றத்தில் கண்ட பெண்கள் உரக்க அழுதனர்.(21,22) முற்காலத்தில் திரௌபதியுடன் சேர்ந்து அறுவராகி, பகடையாட்டத்தில் வீழ்த்தப்பட்டுத் தலைநகரைவிட்டுப் புறப்பட்ட கோலத்திலேயே இப்போதும் அவர்கள் தெரிந்தனர். எனினும், அந்தச் சகோதரர்கள் அனைவரும் ஓய்வில் பெரும் உற்சாகம் கொண்டனர்.(23) யுதிஷ்டிரனின் நோக்கங்களை உறுதி செய்து கொண்டவர்களும், விருஷ்ணிகளின் அழிவைக் கண்டவர்களுமான அவர்களை வேறு எந்தச் செயல்பாட்டாலும் நிறைவடையச் செய்ய இயலாது. ஐந்து சகோதரர்களும், ஆறாவதாகத் திரௌபதியும், ஏழாவதாக ஒரு நாயும் சேர்ந்து(24) தங்கள் பயணத்திற்குப் புறப்பட்டனர். உண்மையில், இவ்வாறே, ஏழு பேர் அடங்கிய அந்தத் தரப்புக்குத் தலைமை தாங்கிய மன்னன் யுதிஷ்டிரன், யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தில் இருந்து சென்றான். குடிமக்களும், அரச குடும்பத்துப் பெண்களும் சிறிது தொலைவுக்கு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(25) எனினும், அவர்களில் எவருக்கும், மன்னனை அவனுடைய கருத்தில் இருந்து பின்வாங்கும்படி கேட்கும் துணிவில்லை. அந்த நகரவாசிகள் திரும்பிவந்தனர்.(26)

கிருபரும், பிறரும் தங்களுக்கு நடுவில் இருந்து யுயுத்சுவைச் சூழ்ந்து நின்றனர். ஓ! குரு குலத்தோனே {ஜனமேஜயனே}, நாகத் தலைவனின் மகளான உலூபி, கங்கையின் நீருக்குள் நுழைந்தாள்[1].(27) இளவரசி சித்திராங்கதை மணிப்புரத்தின் தலைநகருக்குப் புறப்பட்டுச் சென்றாள். பரிக்ஷித்தின் பாட்டிகளான வேறு பெண்கள் அவனைச் சூழ்ந்திருந்தனர்.(28) அதே வேளையில், ஓ! குரு குலத்தோனே அந்த உயர் ஆன்ம பாண்டவர்களும், பெரும்புகழைக் கொண்ட திரௌபதியும், தொடக்க உண்ணாநோன்பை நோற்று, கிழக்கு நோக்கிய முகங்களைக் கொண்டு புறப்பட்டுச் சென்றனர்.(29) யோகத்தில் தங்களை நிறுவி கொண்ட அந்த உயர் ஆன்மாக்கள் துறவறம் நோற்கத் தீர்மானித்து, பல்வேறு நாடுகளைக் கடந்து பல்வேறு ஆறுகளையும், கடல்களையும் அடைந்தனர்.(30) யுதிஷ்டிரன் முன்னே சென்றான், அவனுக்குப் பின்னால் பீமன்; அடுத்து அர்ஜுனன்; அவனுக்கு அடுத்துப் பிறப்பின் வரிசையில் இரட்டையர்கள்;(31) ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, அவர்கள் அனைவருக்கும் பின்னால் பெண்களில் முதன்மையானவளும், பேரழகைக் கொண்டவளும், கரிய நிறத்தவளும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவளுமான திரௌபதி சென்றாள்.(32)

[1] "உலூபி நீரில் மூழ்கினாள் என்று கொள்ள முடியாது. அவள் நாகலோகத்திற்கு ஓய்ந்து சென்றாள் என்றே இங்குச் சொல்லப்படுகிறது. ஆதிபர்வத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் அர்ஜுனன் கங்கையில் நீராடிக் கொண்டிருந்தபோது, நீருக்குள் இருந்த தன் அரண்மனைக்கு உலூபி அவனைத் தூக்கிச் சென்று அவனை மணந்து கொண்டாள் என்று சொல்லப்படுகிறது. நாகர்கள் பாதித் தேவர்களாவர், அவர்களால் காற்றிலும், நீரிலும் நகரவும், விரும்பியபோது சொர்க்கத்திற்கு உயரவும், பாதாளத்தில் தங்கள் இல்லத்தைக் கொள்ளவும் முடியும். இவர்களை ஆரியரல்லாத இனமாகக் கொள்வது வங்கக் கவிஞர்களின் புதுப்பாங்காக இருக்கிறது. இது கவி உரிமம் வழங்கும் முட்டாள்தனத்தின் உச்சமாகும். எனினும், இந்த எழுத்தாளர்களில் ஒருவரும் ஸம்ஸ்க்ருதம் அறிந்தவர்களல்ல; அதுவே அவர்களுக்கான சிறந்த சாக்காகவும் இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். ஆரிய, திராவிட வேறுபாடு இட்டுக்கட்டப்பட்டபோதே கங்குலி அதற்குப் பதில் கூறியிருப்பதை இங்கே நாம் காண்கிறோம்.

பாண்டவர்கள் காட்டுக்குப் புறப்பட்ட போது, ஒரு நாயும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றது. தொடர்ந்து சென்ற அவ்வீரர்கள் செந்நீர் கொண்ட கடலை அடைந்தனர்.(33) ஓ! மன்னா {ஜனமேஜயா}, தனஞ்சயன் {அர்ஜுனன்}, பெரும் மதிப்பு மிக்கப் பொருட்களில் ஒருவனுக்குள்ள பேராசையின் மூலம் இயக்கப்பட்டவனாகத் தன்னுடைய தெய்வீக வில்லான காண்டீவத்தையும், வற்றாதவையான தன்னிரு அம்பறாத்தூணிகளையும் கைவிடாமல் இருந்தான்.(34) நெருப்பின் தேவன் தங்களுக்கு முன்னால் ஒரு மலையென நிற்பதைப் பாண்டவர்கள் கண்டனர். அவர்களுடைய வழியை அடைத்த அந்தத் தேவன் உடல் கொண்ட வடிவத்துடன் அங்கே நின்று கொண்டிருந்தான். ஏழு தழல்களைக் கொண்ட அந்தத் தேவன் {நெருப்பின் தேவன்} பாண்டவர்களிடம், "பாண்டுவின் வீர மகன்களே, என்னை நெருப்பின் தேவனாக {அக்னி தேவனாக} அறிவீராக.(36) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, ஓ! பகைவரை எரிப்பவனான பீமசேனா, ஓ! அர்ஜுனா, ஓ! பெருந்துணிவுமிக்க இரட்டையர்களே, நான் சொல்வதைக் கேட்பீராக.(37) குரு குலத்தின் முதன்மையானவர்களே, நானே நெருப்பின் தேவன். அர்ஜுனன் மற்றும் நாராயணனின் பலத்தாலும், என்னாலும் காண்டவக் காடு எரிக்கப்பட்டது.(38) உன் தம்பியான பல்குனன் {அர்ஜுனன்}, உயர்ந்த ஆயுதமான காண்டீவத்தைக் கைவிட்ட பிறகு காட்டுக்குச் செல்லட்டும். இவனுக்கு இனியும் இதற்கான தேவை ஏதும் இல்லை.(39) உயர் ஆன்மக் கிருஷ்ணனுடைய மதிப்புமிக்கச் சக்கரம் (உலகில் இருந்து) மறைந்து போனது. மீண்டும் வேளை வரும்போது அஃது அவனது கைகளுக்குத் திரும்பும்.(40) விற்களில் முதன்மையான இந்தக் காண்டீவம், பார்த்தனின் பயன்பாட்டுக்காக வருணனிடம் இருந்து என்னால் அடையப்பட்டதாகும். அதை நான் வருணனுக்கே கொடுக்க வேண்டும்" என்றான் {அக்னி தேவன்}.(41)

இதன்பேரில், அந்தத் தேவன் சொல்வதைச் செய்யுமாறு சகோதரர்கள் அனைவரும் அர்ஜுனனைத் தூண்டினர். அப்போது அவன் {அர்ஜுனன்} வில்லையும் {காண்டீவத்தையும்}, வற்றாதவையான இரு அம்பறாத்தூணிகளையும் (கடலின்) நீருக்குள் வீசினான்.(42) அதன் பிறகு, ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, நெருப்பின் தேவன் அங்கேயே அப்போதே மறைந்து போனான். பாண்டுவின் வீர மகன்கள் அதன் பிறகு, தெற்கு நோக்கித் தங்கள் முகங்களைத் திருப்பியவர்களாகச் சென்றனர்.(43) அதன் பிறகு, அந்தப் பாரத இளவரசர்கள் உப்புக் கடலின் வடக்குக் கரையில் தென் மேற்காகச் சென்றனர்.(44) பிறகு மேற்கு நோக்கித் திரும்பிய அவர்கள், பெருங்கடலால் மறைக்கப்பட்ட துவாரகா நகரத்தைக் கண்டனர்.(45) அடுத்ததாக அந்த முதன்மையானவர்கள் வடக்கு நோக்கிச் சென்றனர். யோகம் நோற்றுக் கொண்டிருந்த அவர்கள், மொத்த பூமியையும் வலம் வர விரும்பினர்" {என்றார் வைசம்பாயனர்}.(46)

மஹாப்ரஸ்தானிகபர்வம் பகுதி – 1ல் உள்ள சுலோகங்கள் : 46

ஆங்கிலத்தில் | In English

ஒவ்வொருவராக விழுந்தனர்! - மஹாப்ரஸ்தானிகபர்வம் பகுதி – 2

Falling down one by one! | Mahaprasthanika-Parva-Section-2 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : வரிசையாகச் செல்லும்போது திரௌபதியும் பாண்டவர்களும் ஒவ்வொருவராக விழுவது; அவர்கள் விழக் காரணம் கேட்ட பீமனுக்குப் பதில் சொல்லி வந்த யுதிஷ்டிரன்; நாய் மட்டும் தொடர்ந்து சென்றது...



வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாக்களைக் கொண்டவர்களும், யோகத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருந்தவர்களுமான அந்த இளவரசர்கள் {பாண்டவர்கள்} வடக்கு நோக்கிச் சென்று மிகப் பெரும் மலையான ஹிமவானை {இமயத்தைக்} கண்டனர்.(1) ஹிமவானைக் கடந்த அவர்கள், மணல் நிறைந்த ஒரு பெரிய பாலைவனத்தைக் கண்டனர். பிறகு அவர்கள், உயர்ந்த சிகரங்கள் கொண்ட மலைகளில் முதன்மையான மேரு மலையைக் கண்டனர்.(2) யோகத்தில் குவிந்திருந்த அந்த வலிமைமிக்கவர்கள் அனைவரும் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, யாஜ்ஞசேனி {திரௌபதி} யோகத்தில் இருந்து வீழ்ந்து பூமியில் விழுந்தாள்.(3)


பெரும்பலம் கொண்ட பீமசேனன் அவளது வீழ்ச்சியைக் கண்டு நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம்,(4) "ஓ! பகைவரை எரிப்பவரே, இந்த இளவரசி எந்தப் பாவச் செயலையும் செய்யவில்லை. இந்தக் கிருஷ்ணை பூமியில் விழுந்ததற்கான காரணத்தை எங்களுக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(5)

யுதிஷ்டிரன் {பீமனிடம்}, "தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்குத்} தனிச்சிறப்பளிக்கும் பெரும்பாகுபாடு இவளிடம் {திரௌபதியிடம்} உண்டு. ஓ! மனிதர்களில் சிறந்தவனே, அவ்வொழுக்கத்தின் கனியை {பலனை} அவள் இன்று அடைந்திருக்கிறாள்" என்றான்".(6)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பாரதக் குலத்தில் முதன்மையான அவன், இதைச் சொல்லிவிட்டுத் தொடர்ந்து சென்றான். அற ஆன்மாவையும், பெரும் நுண்ணறிவையும் கொண்ட அந்த மனிதர்களில் முதன்மையானவன், மனத்தில் மனத்தையே கொண்டு தொடர்ந்து சென்றான்.(7) அப்போது, பெரும் கல்வி கற்றவனான சகாதேவன் பூமியில் விழுந்தான். அவன் கீழே விழுவதைக் கண்ட பீமன் மன்னனிடம்,(8) "ஐயோ, பெரும் பணிவுடன் நம் அனைவருக்கும் தொண்டு செய்துவந்த மாத்ராவதியின் மகன் {சகாதேவன்}, ஏன் பூமியில் விழுந்தான்?" என்று கேட்டான்.(9)

யுதிஷ்டிரன் {பீமனிடம்}, "அவன் {சகாதேவன்}, ஒருபோதும் ஞானத்தில் தனக்கு இணையானவரென ஒருவரையும் கருதவில்லை. அந்தக் குற்றத்தின் காரணமாகவே இந்த இளவரசன் {சகாதேவன்} விழுந்தான்" என்றான்".(10)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இதைச் சொன்ன மன்னன், சகாதேவனை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றான். உண்மையில், குந்தியின் மகனான யுதிஷ்டிரன், தன் சகோதரர்களுடனும், நாயுடனும் தொடர்ந்து சென்று கொண்டிருந்தான்.(11) உற்றார் உறவினரிடம் பேரன்பு கொண்டவனும், துணிச்சல்மிக்கவனுமான நகுலன், கிருஷ்ணை {திரௌபதி} மற்றும் பாண்டவனான சகாதேவன் ஆகிய இருவரும் விழுவதைக் கண்டு கீழே விழுந்தான்.(12) பெரும் மேனியெழில் கொண்ட வீர நகுலன் விழுந்ததும், பீமன் மீண்டும் மன்னனிடம்,(13) "முழுமையான அறவோனும், நம் ஆணைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிந்தவனும், அழகில் ஒப்பற்றவனுமான இந்த நகுலன் கீழே விழுந்துவிட்டான்" என்றான்.(14)

பீமசேனனால் இவ்வாறு கேட்கப்பட்ட யுதிஷ்டிரன், நகுலனைக் குறித்து இந்தச் சொற்களைச் சொன்னான்: "அவன் அற ஆன்மா கொண்டவனாகவும், நுண்ணறிவு மிக்க மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனாகவும் இருந்தான்.(15) எனினும், மேனியெழில் தனக்கு நிகராக எவரும் இல்லையென அவன் {நகுலன்} நினைத்தான். உண்மையில், அந்த வகையில் அவன் தன்னை அனைவரிலும் மேன்மையானவனாகக் கருதினான்.(16) அதன் காரணமாகவே நகுலன் விழுந்தான். ஓ! விருகோதரா {பீமா}, இதை அறிவாயாக. ஓ! வீரா, ஒரு மனிதனுக்காக விதிக்கப்பட்டதை அவன் அனுபவிக்கவே வேண்டும்" என்றான் {யுதிஷ்டிரன்}.(17)

வெண்குதிரைகளைக் கொண்டவனும், பகைவீரர்களைக் கொல்பவனும், பாண்டுவின் மகனுமான அர்ஜுனன், நகுலனும், பிறரும் விழுவதைக் கொண்டு, இதயத்தில் பெரும் துயருடன் கீழே விழுந்தான்.(18) மனிதர்களில் முதன்மையானவனும், சக்ரனின் சக்தியைக் கொண்டவனுமான அவன் {அர்ஜுனன்} கீழே விழுந்தபோது, உண்மையில், வெல்லப்பட முடியாதவனான அந்த வீரன் மரணத் தருவாயில் இருந்தபோது, பீமன் மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்},(19) "இந்த உயர் ஆன்மா எந்தப் பொய்யையும் சொன்னதாக எனக்கு நினைவில்லை. உண்மையில், கேலிக்காகக் கூட இவன் பொய்யேதும் பேசியவனல்ல. எந்தத் தீய விளைவின் காரணமாக இவன் பூமியில் விழுந்தான்?" என்று கேட்டான்.(20)

யுதிஷ்டிரன் {பீமனிடம்}, "அர்ஜுனன், நம் பகைவர்கள் அனைவரையும் ஒரே நாளில் எரித்துவிடுவேன் என்று சொன்னான். தன் வீரத்தில் செருக்குக் கொண்டவனாக இருப்பினும், அதை அவன் {அர்ஜுனன்} நிறைவேற்றவில்லை. அதனால் அவன் வீழ்ந்தான்.(21) இந்தப் பல்குனன், வில்லாளிகள் அனைவரையும் அலட்சியமாகக் கருதினான். செழிப்பில் விருப்பம் இருக்கும் ஒருவன் ஒருபோதும் இத்தகைய மிகையுணர்வுகளில் ஈடுபடக்கூடாது" என்றான்".(22)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இதைச்சொல்லிவிட்டு மன்னன் தொடர்ந்து சென்றான். பிறகு பீமன் விழுந்தான். கீழே விழுந்த பீமன், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம்,(23) "ஓ! மன்னா, பார்ப்பீராக. உமக்கு அன்பான நான் விழுந்துவிட்டேன். என்ன காரணத்தினால் நான் விழுந்தேன்? அதை நீர் அறிந்தால் எனக்குச் சொல்வீராக" என்றான்.(24)

யுதிஷ்டிரன் {பீமனிடம்}, "நீ அதிகம் உண்டாய், உன் பலம் குறித்துத் தற்பெருமை பேசினாய். ஓ! பார்த்தா {பீமா}, உண்ணும்போது, நீ பிறரின் தேவையை ஒருபோதும் கவனிக்கவில்லை. ஓ! பீமா, அதற்காகவே நீ விழுந்தாய்" என்றான்.(25)

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரன், இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, திரும்பிப் பார்க்காமல் தொடர்ந்து சென்றான். அவன், நான் மீண்டும் மீண்டும் உன்னிடம் சொன்ன அந்த நாய் மட்டுமே ஒரே துணையாக அவனை {யுதிஷ்டிரனைப்} பின்தொடர்ந்து சென்றது" {என்றார் வைசம்பாயனர்}.(26)

மஹாப்ரஸ்தானிகபர்வம் பகுதி – 2ல் உள்ள சுலோகங்கள் : 26


ஆங்கிலத்தில் | In English

ஆரியன் யுதிஷ்டிரன்! - மஹாப்ரஸ்தானிகபர்வம் பகுதி – 3

மகாபாரதம், Mahabharatham in Tamil, மஹாபாரதம், Tamil Mahabharata


ஆரியன் யுதிஷ்டிரன்! - மஹாப்ரஸ்தானிகபர்வம் பகுதி – 3

The noble Yudhishthira! | Mahaprasthanika-Parva-Section-3 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : சொர்க்கம் செல்வதற்கு யுதிஷ்டிரனைத் தன் தேரில் ஏறச் சொன்ன இந்திரன்; நாயை விட மறுத்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனைப் புகழ்ந்த யமன்; சகோதரர்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல விரும்பிய யுதிஷ்டிரன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அப்போது, ஆகாயத்தையும், பூமியையும் உரத்த ஒலியால் நிறைந்தபடி ஒரு தேரில் பிருதையின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} வந்த சக்ரன், அவனை அதில் ஏறச் சொன்னான்.(1) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகள் பூமியில் விழுந்ததைக் கண்டு, அந்த ஆயிரங்கண் தேவனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(2) "என் தம்பிகள் அனைவரும் கீழே விழுந்து விட்டனர். அவர்களும் என்னுடன் வர வேண்டும். ஓ! தேவர்கள் அனைவரின் தலைவா, அவர்கள் அனைவரும் என்னுடன் இல்லாமல் நான் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பவில்லை.(3) ஓ! புரந்தரா, அனைத்து ஆடம்பரங்களுக்கும் தகுந்தவளும், மென்மையானவளுமான இளவரசியும் (திரௌபதியும்) எங்களோடு வர வேண்டும். இதை அனுமதிப்பதே உனக்குத் தகும்" என்றான்.(4)


சக்ரன் {யுதிஷ்டிரனிடம்}"உன் தம்பிகளை நீ சொர்க்கத்தில் காண்பாய். அவர்கள் உனக்கு முன்பே அங்கே சென்றுவிட்டனர். உண்மையில், கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} சேர்த்தே அவர்கள் அனைவரையும் அங்கே காண்பாய். ஓ! பாரதர்களின் தலைவா, நீ துயரடையாதே.(5) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அவர்கள் தங்கள் மனித உடல்களைக் களைந்துவிட்டு அங்கே சென்றிருக்கின்றனர். உன்னைப் பொறுத்தவரையில், நீ உன்னுடைய உடலுடனேயே அங்கே செல்ல விதிக்கப்பட்டிருக்கிறது" என்றான்.(6)

யுதிஷ்டிரன் {சக்ரனிடம்}, "ஓ! கடந்த காலம் மற்றும் நிகழ்காலத்தின் தலைவா, இந்த நாய் என்னிடம் மிகுந்த அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} இருக்கிறது. இதுவும் என்னுடன் வர வேண்டும். இதனிடம் நான் இதயம் நிறைந்த கருணை கொண்டிருக்கிறேன்" என்றான்.(7)

சக்ரன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, இறவாமை, எனக்கு நிகரான நிலை, அனைத்துத் திசைகளிலும் பரந்திருக்கும் செழிப்பு, உயர்ந்த வெற்றி, சொர்க்கத்தின் இன்பங்கள் அனைத்தும் இன்று உன்னால் வெல்லப்பட்டன. இந்த நாயை நீ கைவிடுவாயாக. இதில் எந்தக் கொடுமையும் கிடையாது" என்றான்.(8)

யுதிஷ்டிரன் {சக்ரனிடம்}, "ஓ! ஆயிரங்கண் கொண்டவனே, ஓ! அறவொழுக்கம் கொண்டவனே, அறவொழுக்கம் கொண்ட ஒருவனால் நீதியற்ற ஒரு செயலைச் செய்வது மிகவும் கடினமாகும். என்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட ஒன்றைக் கைவிட்டுச் செழிப்பை அடைய நான் விரும்பவில்லை[1]" என்றான்.(9)

[1] "இந்த ஸ்லோகத்தின் முதல் வரியை சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தால், "ஓர் ஆரியனுக்குத் தகாத செயலைச் செய்வதில் ஓர் ஆரியன் பெருஞ்சிரமத்தை உணர்வான்" என்று பொருள்படும். ஆர்யன் என்று இங்குச் சொல்லப்படுவது, மதிப்பு மிக்கப் பிறப்பு மற்றும் அறவொழுக்கம் கொண்ட ஒரு மனிதனைக் குறிக்கும் என்பதில் ஐயத்திற்கிடமில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "மற்றவனால் செய்யக்கூடிய இழிவான இந்தக் காரியம் மேன்மைபெற்ற என்னால் செய்யமுடியாதது. எந்தச் செல்வத்தினிமித்தம் அன்புள்ள பிராணியை நான் விட வேண்டுமோ அந்தச் செல்வத்துடன் எனக்குச் சேர்க்கை வேண்டாம்" என்றிருக்கிறது.

இந்திரன் {யுதிஷ்டிரனிடம்}, "நாய்களுடன் இருக்கும் மனிதர்களுக்குச் சொர்க்கத்தில் எவ்விடமும் கிடையாது. தவிர, குரோதவாசர்கள் (என்றழைக்கப்படும் தேவர்கள்) அத்தகைய மனிதர்களின் புண்ணியங்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்கின்றனர். ஓ! நீதிமானான மன்னன் யுதிஷ்டிரா, இதைச் சிந்தித்துச் செயல்படுவாயாக. நீ இந்த நாயைக் கைவிடுவாயாக. இதில் கொடுமையேதும் இல்லை" என்றான்.(10)

யுதிஷ்டிரன் {சக்ரனிடம்}, "அர்ப்பணிப்புடன் இருக்கும் ஒருவனைக் கைவிடுவது முடிவிலா பாவத்திற்கு வழிவகுக்கும் எனச் சொல்லப்படுகிறது. இஃது ஒரு பிராமணனைக் கொல்லும் பாவத்திற்கு நிகரானது. எனவே, ஓ! பெரும் இந்திரா, என் மகிழ்ச்சியை விரும்பி நான் இன்று இந்த நாயைக் கைவிட மாட்டேன்.(11) அச்சமடைந்தவனையோ, என்னிடம் அர்ப்பணிப்புள்ளவனையோ, என் பாதுகாப்பை நாடுபவனையோ, ஆதரவற்றவனையோ, துன்பத்தால் பீடிக்கப்பட்டவனையோ, என்னிடம் வந்தவனையோ, தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதில் பலவீனனையோ, உயிரை வேண்டுபவனையோ ஒருபோதும் கைவிடமாட்டேன் என்பது என் உறுதியான நோன்பாகும். இத்தகைய ஒருவனை என் உயிர் போகும் வரை ஒருபோதும் நான் கைவிட மாட்டேன்" என்றான்.(12)

இந்திரன் {யுதிஷ்டிரனிடம்}, "ஒரு நாயால் பார்க்கப்படும் வகையில் கொடுக்கப்படும் எந்தக் கொடையும், பரப்பப்படும் எந்த வேள்வியும், வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் ஆகுதிகள் எதுவும் குரோதவாசர்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. எனவே, நீ இந்த நாயைக் கைவிடுவாயாக. இந்த நாயைக் கைவிடுவதன் மூலம் நீ தேவர்களின் உலகை அடைவாய்.(13) ஓ! வீரா {யுதிஷ்டிரா}, உன் தம்பிகள், கிருஷ்ணை {திரௌபதி} ஆகியோரைக் கைவிட்ட நீ உன் சொந்த செயல்களால் இன்பலோகத்தை அடைந்திருக்கிறாய். ஏன் கலக்கமடைகிறாய்? நீ அனைத்தையும் துறந்துவிட்டாய். ஏன் இந்த நாயையைத் துறக்காமலிருக்கிறாய்?" என்று கேட்டான்.(14)

யுதிஷ்டிரன், "இறந்தோருடன் நட்போ, பகையோ கிடையாது என்பது உலகங்கள் அனைத்திலும் நன்கறியப்பட்டது. என் தம்பிகளும், கிருஷ்ணையும் இறந்த போது, என்னால் அவர்களை மீட்க முடியவில்லை. எனவே, நான் அவர்களைக் கைவிட்டேன். எனினும், அவர்கள் உயிரோடு இருந்தவரை அவர்களை நான் ஒருபோதும் கைவிடவில்லை.(15) ஓ! சக்ரா, பாதுகாப்பு நாடி வந்தவனை அச்சுறுத்துவது, பெண்ணைக் கொல்வது, பிராமணனுக்குரியதைக் களவாடுவது, நண்பனுக்குத் தீங்கிழைப்பது என்ற இந்த நான்கும் செயல்களும், அர்ப்பணிப்புடன் இருப்பவனைக் கைவிடுவதற்கு நிகரானவையென நான் நினைக்கிறேன்" என்றான்".(16)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இந்தச் சொற்களைக் கேட்டு (நாயாக இருந்த) அறத் தேவன் மிகவும் நிறைவடைந்தவனாகப் புகழால் நிறைந்த இனிய குரலில் இந்தச் சொற்களைச் சொன்னான்.(17)

தர்மன் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னர்களின் மன்னா, நீ நற்குடியில் பிறந்தவனாகவும், நுண்ணறிவையும், பாண்டுவின் நல்லொழுக்கத்தையும் கொண்டவனாக இருக்கிறாய். ஓ! பாரதா, அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொள்வது இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.(18) ஓ! மகனே, முன்பு துவைத வனத்தில் பேராற்றல் கொண்டவர்களான உன் உடன்பிறந்தோர் இறந்தபோது என்னால் நீ சோதிக்கப்பட்டாய்.(19) உன்னுடன் பிறந்தவர்களான பீமனையும், அர்ஜுனனையும் அலட்சியம் செய்து உன் (மாற்றாந்) தாய்க்கு நன்மை செய்யுஃம விருப்பத்தில் நகுலனின் உயிரை மீட்க நீ விரும்பினாய்[2].(20) தற்போதைய நிகழ்வில் உன்னிடம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக நினைத்து, இவனை {நாயைத்} துறப்பதற்குப் பதில் தேவர்களின் தேரையே நீ துறந்துவிட்டாய். எனவே, ஓ! மன்னா, சொர்க்கமேதும் உனக்கு நிகரானதல்ல.(21) எனவே, ஓ! பாரதா, வற்றாத இன்பங்களைக் கொண்ட உலகங்கள் உனதாகின. ஓ! பாரதர்களின் தலைவா, நீ அவற்றை வென்றுவிட்டாய், உன்னுடைய கதி உயர்ந்ததும், தெய்வீகமானதுமாகும்" என்றான் {யமன்}".(22)

[2] "நகுலன் மாத்ரிக்கும், அவளது மூதாதையருக்குமான தர்ப்பணங்களைச் செய்ய வேண்டும என்பதற்காக யுதிஷ்டிரன் அவனது உயிரை வேண்டினான். அர்ஜுனனோ, பீமனோ அதற்குப் பயன்பட மாட்டார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அப்போது தர்மன், சக்ரன், மருத்துகள், அஸ்வினிகள், வேறு தேவர்கள், தெய்வீக முனிவர்கள் ஆகியோர் யுதிஷ்டிரனைத் தேரில் ஏறச் செய்து சொர்க்கத்திற்குச் சென்றனர். வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், தங்கள் விருப்பத்தின் பேரில் எந்த இடத்திற்கும் செல்ல வல்லவர்களுமான அவர்கள் தங்கள் தங்களுக்குரிய தேர்களைச் செலுத்தினார்கள்.(23,24) குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனான மன்னன் யுதிஷ்டிரன், தன் பிரகாசத்தால் மொத்த ஆகாயத்தையும் ஒளிபெறச் செய்து, விரைவாக ஏறி அந்தத் தேரைச் செலுத்தினான்.(25)

பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையானரும், தவம் கொண்டவரும், உலகங்கள் அனைத்தையும் அறிந்தவருமான நாரதர், அப்போது தேவ கூட்டத்திற்கு மத்தியில் இந்தச் சொற்களைச் சொன்னார்:(26)"இங்கே இருக்கும் அரசமுனிகள் அனைவரும், யுதிஷ்டிரனுடைய சாதனைகளால் கடக்கப்பட்ட சாதனைகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர்.(27) இவன் தன் புகழாலும், காந்தியாலும், ஒழுக்கமெனும் செல்வத்தாலும் உலகங்கள் அனைத்தையும் மறைத்து, தன் சொந்த (மனித) உடலுடன் சொர்க்கத்தை அடைந்தான். பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரைத்} தவிர வேறு எவரும் இதை அடைந்ததாக நாம் கேள்விப்பட்டதில்லை[3]" என்றார்.(28)

[3] கும்பகோணம் பதிப்பில், "முன்னோர்களான ராஜரிஷிகளையும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். கௌரவ ராஜரான யுதிஷ்டிரர் அவர்களுடைய கீர்த்தியை மறைத்துவிட்டு மேன்மை பெற்றிருக்கிறார். பாண்டவரைத் தவிர, மற்றவன் கீர்த்தியினாலும், பிரதாபத்தினாலும், நல்லொழுக்கமென்னும் செல்வத்தினாலும் உலகங்களைச் சூழ்ந்து தன் சரீரத்துடன் (இங்கு) வந்ததாக நாம் கேட்கவில்லை. பிரபுவே, நீர் பூமியிலிருக்கும்பொழுது பூமியில் தேவர்களுக்கு ஆலயங்களான எந்தத் தேஜஸுகளைப் பார்த்தீரோ அவைகளை ஆயிரக்கணக்காகப் பாரும்" என்றிருக்கிறது.

அறம் சார்ந்தவனான அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, நாரதரின் இந்தச் சொற்களைக் கேட்டு, தேவர்களையும், அங்கே இருந்த அரசமுனிகள் யாவரையும் வணங்கி,(29) "மகிழ்ச்சி நிறைந்ததோ, துன்பகரமானதோ, என் தம்பிகள் எந்த உலகத்தை இப்போது அடைந்திருக்கிறார்களோ அங்கேயே நான் செல்ல விரும்புகிறேன். நான் வேறெங்கும் செல்ல விரும்பவில்லை" என்றான்.(30)

மன்னனின் இந்தப் பேச்சைக் கேட்ட தேவர்களின் தலைவன் புரந்தரன், உன்னத அறிவால் நிறைந்த இந்தச் சொற்களைச் சொன்னான்,(31) "ஓ! மன்னர்களின் மன்னா, உன் புண்ணியச் செயல்களால் வெல்லப்பட்ட இந்த இடத்தில் நீ வாழ்வாயாக. நீ ஏன் இன்னும் மனிதப் பற்றுகளைப் பேணி வளர்க்கிறாய்?(32) எந்த மனிதனாலும் ஒருபோதும் அடைய முடியாத பெரும் வெற்றியை நீ அடைந்திருக்கிறாய். ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, உன்னுடன் பிறந்தோரும் இன்பலோகங்களையே வென்றிருக்கின்றனர்.(33) மனிதப் பற்றுகள் இன்னும் உன்னைத் தீண்டிக் கொண்டிருக்கின்றன. இது சொர்க்கம். தேவர்களின் உலகை அடைந்திருக்கும் தெய்வீக முனிவர்களையும், சித்தர்களையும் இதோ பார்" என்றான்.(34)

பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்ட யுதிஷ்டிரன் மீண்டும் தேவர்களின் தலைவனுக்குப் பதிலளிக்கும் வகையில்,(35) "ஓ! தைத்தியர்களை வென்றவனே, அவர்களிடமிருந்து பிரிந்திருக்கும் எங்கும் நான் வசிக்கத் துணியேன். என்னுடன் பிறந்தோர் எங்கே சென்றனரோ அங்கேயே நான் செல்ல விரும்புகிறேன்.(36) பெண்களில் முதன்மையானவளும், போதுமான விகிதங்களில் அங்கங்களைக் கொண்டவளும், கரிய நிறத்தவளும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவளும், அறவொழுக்கம் ஒழுகுபவளுமான திரௌபதி எங்கே சென்றாளோ, அங்கேயே நானும் செல்ல விரும்புகிறேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.(37)

மஹாப்ரஸ்தானிகபர்வம் பகுதி – 3ல் உள்ள சுலோகங்கள் : 37
*****மஹாப்ரஸ்தானிக பர்வம் முற்றும்*****
******அடுத்தது கடைசி பர்வமான... ஸ்வர்க்காரோஹணிக பர்வம்*****



ஒவ்வொருவராக விழுந்தனர்! - மஹாப்ரஸ்தானிகபர்வம் பகுதி – 2

மகாபாரதம், Mahabharatham in Tamil, மஹாபாரதம், Tamil Mahabharata


ஆங்கிலத்தில் | In English



யுதிஷ்டிரனின் பகைமை! - ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 1

The hostility of Yudhishthira! | Svargarohanika-Parva-Section-1 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : சொர்க்கத்தில் துரியோதனனைக் கண்ட யுதிஷ்டிரன்; அவனோடு வசிக்க விரும்பாமல் தன் தம்பிகள் இருக்குமிடத்தைக் காட்டுமாறு இந்திரனிடம் வேண்டியது; நாரதர் சொர்க்கத்தில் பகைமை பாராட்டக்கூடாதென்றது; யுதிஷ்டிரனின் மறுமொழி...


ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "சொர்க்கத்தை அடைந்த பிறகு, முற்காலத்தில் பாண்டவர்கள் மற்றும் திருதராஷ்டிரன் மகன்களான என் பாட்டன்மாரால் முறையாக அடையப்பட்ட உலகங்கள் என்னென்ன?(1) நான் இதைக் கேட்க விரும்புகிறேன். அற்புதச் செயல்களைச் செய்யும் பெரும் முனிவர் வியாசரின் மூலம் கற்பிக்கப்பட்ட நீர் அனைத்தையும் அறிந்திருப்பீர் என நான் நினைக்கிறேன்" என்றான்.(2)


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "யுதிஷ்டிரன் முதலிய உன் பாட்டன்மார்கள், தேவர்களின் இடமான சொர்க்கத்தை அடைந்த பின்னர் என்ன செய்தனர் என்பதை இப்போது கேட்பாயாக.(8) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், சொர்க்கத்திற்கு வந்ததும், பெருஞ்செழிப்புடன் கூடிய துரியோதனன், ஒரு சிறந்த இருக்கையில் அமர்ந்திருப்பதைக் கண்டான்.(4) சூரியனைப் போன்ற பிரகாசமிக்க அவன், வீரர்களுக்குரிய புகழ் சின்னங்கள் அனைத்தையும் தரித்திருந்தான். அவன், சுடர்மிக்கப் பிரகாசத்துடன் கூடிய தேவர்கள் பலர் மற்றும் அறச்செயல்களைச் செய்யும் சாத்யர்கள் ஆகியோரின் துணையுடன் இருந்தான்.(5) யுதிஷ்டிரன், துரியோதனனையும், அவனது செழிப்பையும் கண்டு, திடீரெனச் சினத்தால் நிறைந்தவனாகப் பார்க்காமல் திரும்பினான்.(6)

அவன் தன் துணைவர்களை உரக்க அழைத்து, "பேராசை மற்றும் சிறுமதியால் களங்கப்பட்ட துரியோதனனுடன் இன்பலோகங்களைப் பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை.(7) ஆழ்ந்த காட்டில் பெரிதும் பீடிக்கப்பட்டவர்களான எங்களால் மொத்த உலகிலும் உள்ள நண்பர்களும் உற்றார் உறவினரும்  இவனுக்காகவே கொல்லப்பட்டனர்.(8) அறம் சார்ந்தவளும், களங்கமற்ற குணங்களைக் கொண்டவளும், எங்கள் மனைவியுமான பாஞ்சால இளவரசி திரௌபதி, எங்கள் பெரியோர் அனைவரின் முன்னிலையில் இவனுக்காகவே சபைக்கு மத்தியில் இழுத்துவரப்பட்டாள்.(9) தேவர்களே, நான் சுயோதனனைக் காணவும் விரும்பவில்லை. என்னுடன் பிறந்தோர் எங்கிருக்கின்றனரோ அங்கேயே நான் செல்ல விரும்புகிறேன்" என்றான்.(10)

நாரதர், சிரித்துக் கொண்டே, "ஓ! மன்னர்களின் மன்னா, இஃது இவ்வாறே இருக்கவேண்டும். சொர்க்கத்தில் வசிக்கும்போது பகைமைகள் அனைத்தும் இல்லாமல் போகின்றன.(11) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, மன்னன் துரியோதனனைக் குறித்து இவ்வாறு சொல்லாதே. என் சொற்களைக் கேட்பாயாக.(12) மன்னன் துரியோதனன் இதோ இருக்கிறான். அறவோர், மற்றும் இப்போது சொர்க்கவாசிகளாக இருக்கும் மன்னர்களில் முதன்மையானோர் ஆகியோரால் தேவர்களுடன் சேர்த்து இவனும் வழிபடப்படுகிறான்.(13) போரெனும் தீயில் தன்னுடலையே ஆகுதியாக ஊற்றிய இவன், வீரர்கள் அடையும் கதியை அடைந்திருக்கிறான்.(13) பூமியில் உண்மையில் தேவர்களைப் போலவே இருந்த நீயும், உன்னுடன் பிறந்தோரும் இவனால் எப்போதும் துன்புறுத்தப்பட்டீர்கள்.(14) இருப்பினும் க்ஷத்திரிய நடைமுறைகளை நோற்றதன் மூலம் இவன் {துரியோதனன்} இந்த உலகத்தை அடைந்திருக்கிறான். அச்சம் நிறைந்த சூழ்நிலையில் பூமியின் தலைவனான இவன் அச்சமடையவில்லை.(15) ஓ! மகனே, பகடையாட்டத்தில் உனக்கு இழைக்கப்பட்ட துன்பங்களை நீ மனத்தில் கொள்ளாதே. திரௌபதியின் துன்பங்களை நினைவுகூர்வது உனக்குத் தகுந்ததல்ல.(16) உன் உற்றார் உறவினரால் போர் மற்றும் பிற சூழ்நிலைகளில் உங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குகளையும் நினைவுகூர்வது உனக்குத் தகுந்ததல்ல.(17) கண்ணியமான தொடர்பு விதிகளின்படி இப்போது நீ துரியோதனனைச் சந்திக்க வேண்டும். ஓ! மனிதர்களின் தலைவா, இது சொர்க்கமாகும். இங்கே பகைமைகள் இருக்க முடியாது" என்றார் {நாரதர்}.(18)

இவ்வாறு நாரதரால் சொல்லப்பட்டாலும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், குரு மன்னனுமான யுதிஷ்டிரன், தன்னுடன் பிறந்தோரைக் குறித்து விசாரிக்கும் வகையில், "வீரர்களுக்காக ஒதுக்கப்படும் இந்த நித்திய உலகங்கள், அறமற்றவனும், பாவம் நிறைந்தவனும், இழிந்தவனும், நண்பர்களுக்கும், மொத்த உலகத்திற்கும் அழிவேற்படுத்தியவனுமான துரியோதனனுடையதென்றால்,(20) மொத்த பூமியில் இருந்தும் குதிரைகள், யானைகள் உள்ளிட்டவையும், மனிதர்களும் எவனுக்காக அழிக்கப்பட்டனரோ, எந்த இழிந்தவனுக்காக எங்கள் தவறுக்குளுக்குச் சிறந்த முறையில் தீர்வு காண நினைத்து கோபத்தால் எரிந்து கொண்டிருந்தோமோ அவனுக்குரியதென்றால்,(21) உயர்ந்த நோன்புகளைக் கொண்டவர்களும், உறுதிமொழிகளை நிலையாக நிறைவேற்றியவர்களும், பேச்சில் வாய்மை நிறைந்தவர்களும், துணிவுக்காப் புகழ்பெற்றவர்களும், என்னுடன் பிறந்தோருமான அந்த உயர் ஆன்ம வீரர்களால் அடையப்பட்ட உலகங்களை நான் காண விரும்புகிறேன். குந்தியின் மகனும், போரில் கலங்கப்பட முடியாதவருமான உயர் ஆன்மக் கர்ணர்,(22,23) ஓ! பிராமணரே {நாரதரே}, திருஷ்டத்யும்னன், சாத்யகி, திருஷ்டத்யும்னன் மகன்கள், க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றும்போது மரணமடைந்த பிற க்ஷத்திரியர்கள் ஆகியோர் எங்கே இருக்கின்றனர்? ஓ! நாரதரே, அவர்களை இங்கே நான் காணவில்லை. ஓ! நாரதரே, விராடர், துருபதர், திருஷ்டகேதுவின் தலைமையிலான பிற க்ஷத்திரியர்கள்,(24,25) பாஞ்சால இளவரசன் சிகண்டி, திரௌபதியின் மகன்கள், போரில் தடுக்கப்பட முடியாத அபிமன்யு ஆகியோரை நான் காண விரும்புகிறேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.(26)

ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 1ல் உள்ள சுலோகங்கள் : 26
இன்னும் 5 பகுதிகளே உள்ளன. அத்துடன் முழு மஹாபாரதம் நிறைவுபெறுகிறது.


ஆங்கிலத்தில் | In English

நரகம்! - ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 2

மகாபாரதம், Mahabharatham in Tamil, மஹாபாரதம், Tamil Mahabharata


நரகம்! - ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 2

The hell! | Svargarohanika-Parva-Section-2 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : தன்னைச் சேர்ந்தவர்களுடன் வசிக்க விரும்பிய யுதிஷ்டிரன்; உறவினர்களைக் காட்ட யுதிஷ்டிரனை நரகத்திற்கு அழைத்துச் சென்ற தேவதூதன்; காணப் பொறாமல் திரும்பிய யுதிஷ்டிரன்; அவர்கள் தன்னைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து தூதனிடம் வர மறுத்தது; தூதன் இந்திரனுக்குச் சொன்னது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், (யுதிஷ்டிரன் தேவர்களிடம்} "தேவர்களே, அளவற்ற ஆற்றலைக் கொண்ட ராதையின் மகன் {கிருஷ்ணன்}, என்னுடன் பிறந்த உயர் ஆன்மாக்கள், யுதாமன்யு, உத்தமௌஜஸ்,(1) போர் நெருப்பில் (ஆகுதிகளாகத்) தங்கள் உடல்களை ஊற்றிய பெரும் வீரர்கள், எனக்காகப் போரில் மரணமடைந்த மன்னர்கள் மற்றும் இளவரசர்களை நான் இங்கே காணவில்லை.(2) புலிகளின் ஆற்றலைக் கொண்ட அந்தப் பெருந்தேர்வீரர்கள் எங்கே? அந்த முதன்மையான மனிதர்கள் இந்த உலகத்தை அடைந்தனரா?(3) தேவர்களே, அந்தப் பெருந்தேர்வீரர்கள் இந்த உலகத்தை அடைந்திருந்தால் மட்டுமே நான் அந்த உயர் ஆன்மாக்களோடு இங்கே வசிப்பேன் என்பதை அறிவீராக.(4)


தேவர்களே, மங்கலமான இந்த நித்திய உலகம் அந்த மன்னர்களால் அடையப்படவில்லையெனில், என் உடன்பிறந்தவர்களும், என் உற்றார் உறவினர்களும் இல்லாத இந்த இடத்தில் நான் வாழ மாட்டேன்.(5) (போருக்குப் பிறகு) நீர்ச்சடங்குகள் செய்த போது, என் தாய் {குந்தி}"கர்ணனுக்கும் நீர்க்காணிக்கைகளைச் செலுத்துவாயாக" என்று சொன்னதைக் கேட்டேன். என் தாயின் அந்தச் சொற்களைக் கேட்டதிலிருந்து நான் துன்பத்தால் எரிந்து வருகிறேன்.(6) தேவர்களே, என் தாயின் பாதங்கள், அளவிட முடியாத ஆன்மாவைக் கொண்ட கர்ணருடைய பாதங்களுக்கிடையிலான ஒற்றுமையை நான் கண்டபோதே, பகையணிகளைப் பீடிப்பவரான அவரின் கீழ் என்னை நான் நிறுத்திக் கொள்ளவில்லையே என நான் அடிக்கடி வருந்தினேன். நாங்களும் கர்ணரும் சேர்ந்திருந்தால், சக்ரனாலும் போரில் எங்களை வீழ்த்த இயலாது[1].(7,8)

[1] "யுதிஷ்டிரன், குந்தியின் பாதங்களுக்கும், கர்ணனின் பாதங்களுக்கும் இடையிலுள்ள ஒற்றுமையைக் கண்டதும், கர்ணனிடம் தான் கொண்ட ஏக்கத்தை யுதிஷ்டிரனால் விளக்க முடியாதுதும் இங்கே சுட்டிக் காட்டப்படுகிறது. பகடையில் தோற்ற பிறகு அவனிடமும், அவனுடன் பிறந்தோரிடமும் குரு சபையில் வைத்து துரியோதனன் பேசிய கொடும்பேச்சுகளை அவன் கேட்காதவனாக இருக்கும் அளவுக்கு யுதிஷ்டிரனிடம் இந்த ஒற்றுமை குறித்த நினைப்பு இருந்தது. கர்ணன் யார் என்பதைப் போருக்குப் பின் யுதிஷ்டிரன் அறியும் வரை அந்தக் குழப்பம் அவனுக்கு இருந்து கொண்டே இருந்தது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

சூரியனின் பிள்ளையான அவர் {கர்ணர்} எங்கிருக்கிறாரோ அங்கே அவரை நான் காண விரும்புகிறேன். ஐயோ அவருடனான உறவை நாங்கள் அறியாதிருந்தோம். அவரைக் {கர்ணரைக்} கொல்லும்படி அர்ஜுனனை நானே ஏவினேன்.(9) பயங்கர ஆற்றலைக் கொண்டவனும், என் உயிர் மூச்சைவிட எனதன்புக்குரியவனுமான பீமனையும், இந்திரனுக்கு ஒப்பான அர்ஜுனனையும், ஆற்றலில் அந்தகனுக்கு ஒப்பான இரட்டையர்களையும் {நகுல சகாதேவர்களையும்},(10) நான் பார்க்க விரும்புகிறேன். எப்போதும் அறம் ஒழுகிய பாஞ்சால இளவரசியை {திரௌபதியை} நான் காண விரும்புகிறேன். நான் இங்கே இருக்க விரும்பவில்லை. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன்.(11) தேவர்களில் முதன்மையானவர்களே, என்னுடன் பிறந்தோரிடம் இருந்து நான் துண்டிக்கப்பட்டால் சொர்க்கத்திற்கும் எனக்கும் என்ன இருக்கிறது? என்னுடன் பிறந்தவர்கள் எங்கிருக்கிறார்களோ அதுவே என் சொர்க்கம். என் கருத்தின்படி இது சொர்க்கமல்ல" என்றான்.(12)

தேவர்கள் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மகனே, நீ அங்கே செல்ல ஏங்குகிறாயெனில் தாமதமில்லாமல் அங்கே செல்வாயாக. தேவர்கள் தலைவனின் ஆணையின்படி நாங்கள் உனக்கு ஏற்புடையதைச் செய்யத் தயாராக இருக்கிறோம்" என்றனர்".(13)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! பகைவரை எரிப்பவனே, இவ்வாறு சொன்ன தேவர்கள், ஒரு தேவ தூதனை அழைத்து அவனிடம்,(14) "யுதிஷ்டிரனுக்கு அவனுடைய நண்பர்களையும், உற்றார் உறவினர்களையும் காட்டுவாயாக" என்றனர்.(14)

ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, அப்போது குந்தியின் அரச மகனும் {யுதிஷ்டிரனும்}, அந்தத் தேவ தூதனும் சேர்ந்து (யுதிஷ்டிரன் பார்க்க விரும்பிய) அந்த மனிதர்களின் தலைவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றனர்.(15) தேவதூதன் முதலில் சென்றான், மன்னன் அவனுக்குப் பின்னால் அவனைப் பின்தொடர்ந்து சென்றான். அந்தப் பாதை மங்கலமற்றதாகவும், கடினமானதாகவும், பாவச் செயல்களைச் செய்யும் மனிதர்களால் நடக்கப்படுவதாகவும் இருந்தது.(16) அடர்த்தியான இருளில் மூழ்கியிருந்த அது, மயிர் மற்றும் பாசி ஆகியவற்றால் மூடப்பட்ட புல்வெளியைப்போல அமைந்தது. பாவிகளின் துர்நாற்றத்தால் மாசடைந்து, தசை மற்றும் குருதிச் சேறுடன் கூடியதாக,(17) காட்டு ஈக்கள் நிறைந்ததாக, கொட்டும் வண்டுகள் மற்றும் கொசுக்களுடன் கூடியதாகப் பயங்கரக் கரடிகளின் அத்துமீறல்களுடன் கூடியதாக அஃது {அந்தப் பாதை} இருந்தது. அழுகும் சடலங்கள் ஆங்காங்கே கிடந்தன.(18)

எலும்புகளும், மயிர்களும் நிறைந்திருந்த அது புழு பூச்சிகளின் கேடு விளைவிக்கக்கூடிய வாடையுடன் கூடியதாக இருந்தது. சுடர்மிக்க நெருப்பால் வழிநெடுகிலும் சூழ்ந்திருந்தது.(19) இரும்பு அலகுகளைக் கொண்ட காக்கைகள், வேறு பறவைகள் மற்றும் கழுகுகளும், ஊசிகள் போன்ற நீண்ட கூரிய வாய்களைக் கொண்ட தீய பிரேதங்களும் அங்கே மொய்த்தன. மேலும் அது விந்திய மலையைப் போல அடைதற்கரி காடுகளால் நிறைந்திருந்தது.(20) கொழுப்பு மற்றும் குருதி பூசப்பட்டவையும், கரங்கள் மற்றும் தொடைகள் வெட்டப்பட்டவையும், கால் துண்டிக்கப்பட்டவையும், குடல்கள் வெளியே வந்தவையுமான மனித சடலங்கள் அங்கே விரவிக் கிடந்தன.(21) ஏற்பற்ற சடலங்களின் கடுநெடி நிறைந்ததும், பயங்கரமான வேறு நிகழ்வுகள் நிகழ்வதுமான அந்தப் பாதையில் பல்வேறு எண்ணங்களுடன் மன்னன் சென்று கொண்டிருந்தான்.(22)

கொதிக்கும் நீர் நிறைந்ததும், கடப்பதற்கரிதானதுமான ஓர் ஆற்றையும், கூரிய வாள்கள் மற்றும் கத்திகளை இலைகளாகக் கொண்ட மரங்கள் நிறைந்த காடுகளையும் {அஸிபத்ரவனத்தையும்} அங்கே அவன் கண்டான்.(23) அங்கே பெரும் வெப்பத்துடன் கூடிய மென்மையான வெண்மணல்களும், இரும்பினால் செய்யயப்பட்ட பாறைகளும் கற்களும் நிறைந்திருந்தன. அங்கே சுற்றிலும் இரும்பினால் செய்யப்பட்ட பல குடுவைகள் கொதிக்கும் எண்ணையுடன் {எண்ணெயக்குடங்கள்} இருந்தன.(24) அங்கே முட்களுடன் கூடிய குடசால்மலிகங்கள் {முள்ளிலவமரங்கள்} பல இருந்தன, எனவே தீண்டுவதற்குத் துன்பம் நிறைந்ததாக இருந்தது. குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} அங்கே பாவிகளுக்குக் கொடுக்கப்படும் சித்திரவதைகளைக் கண்டான்.(25)

அனைத்து வகைக் குற்றங்களுடன் கூடிய அந்த மங்கலமற்ற உலகத்தைக் கண்ட யுதிஷ்டிரன், அந்தத் தேவதூதனிடம், "இது போன்ற பாதையில் இன்னும் எவ்வளவு தொலைவு செல்ல வேண்டும்?(26) என்னுடன் பிறந்தோர் எங்கே இருக்கின்றனர் என்பதைச் சொல்வதே உனக்குத் தகும். தேவர்களுக்குரிய எந்த உலகம் இஃது என்பதையும் நான் அறிய விரும்புகிறேன்" என்றான்.(27)

நீதிமானான யுதிஷ்டிரனின் இந்தச் சொற்களைக் கேட்ட தேவ தூதன், தன் நடையை நிறுத்தி, "இவ்வளவு தொலைவே உமது வழியாகும்.(28) சொர்க்கவாசிகள் உம்மை இவ்வளவு தொலைவே அழைத்துச் சென்று நிற்குமாறே எனக்கு ஆணையிட்டனர். ஓ! மன்னர்களின் மன்னா, உமக்குக் களைப்பாயிருந்தால் நீர் என்னுடன் திரும்பலாம்" என்றான்.(29) எனினும், யுதிஷ்டிரன் தாள முடியாத பெருஞ்சோகத்துடனும், கடும் நெடியால் கலங்கடிக்கப்பட்டவனாகவும் இருந்தான். ஓ! பாரதா {ஜனமேஜயா}, திரும்பத் தீர்மானித்து அவன் தன் பாதச்சுவடுகளைப் பின்பற்றத் தொடங்கினான்.(30) கவலையாலும், துயரத்தாலும் பீடிக்கப்பட்டு அந்த அற ஆன்ம ஏகாதிபதி திரும்பினான். சரியாக அதே நேரத்தில் சுற்றிலும் பரிதாபகரமான ஒப்பாரியை அவன் கேட்டான்.(31)

"ஓ! தர்மனின் மகனே, ஓ! அரசமுனியே, ஓ! புனிதத் தோற்றம் கொண்டவனே, ஓ! பாண்டுவின் மகனே, எங்களுக்கு உதவி செய்வதற்காக ஒரு கணம் நிற்பாயாக.(32) ஓ! வெல்லப்பட முடியாதவனே, நீ வந்த போது, உன் மேனியின் இனிய நறுமணத்தைச் சுமந்தபடி, இனிமையான தென்றால் வீசத் தொடங்கியது. இதனால் எங்களது துயர் பெரிதும் துடைக்கப்பட்டது.(33) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, ஓ! மனிதர்களில் முதல்வனே, உன்னைக் கண்டதும் எங்கள் மகிழ்ச்சி பெருகியது. ஓ! பிருதையின் மகனே, மேலும் சில கணங்கள் நீ இங்கே தங்குவதன் மூலம் அந்த மகிழ்ச்சி இன்னும் நீடிக்கட்டும்.(34) ஓ! பாரதா, கொஞ்ச நேரமாவது நீ இங்கே இருப்பாயாக. ஓ! குரு குலத்தோனே, நீ இங்கிருக்கும் வரை கடுநோவு எங்களைப் பீடிப்பதை நிறுத்திக் கொள்ளும்" என்றனர்.(35)

வலியில் துடித்த மனிதர்களின் பரிதாபகரமான குரல்களில் இவையும், இவைபோன்ற இன்னும் வேறு சொற்களும் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தன் காதுகளுக்கு மிதந்து வருவதை அந்த உலகத்தில் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} கேட்டான். கருணைமிக்க இதயம் கொண்ட யுதிஷ்டிரன், துன்பத்தில் இருந்தவர்களின் அந்தச் சொற்களைக் கேட்டு " ஐயோ, எவ்வளவு துன்பம்" என்று உரக்கச் சொன்னான். பிறகு அந்த மன்னன் அசையாமல் நின்றான்.(37) துயரத்தைத் தூண்டியவையும், துன்புறுத்தப்பட்ட மனிதர்களுக்கு உரியவையுமான பேச்சுகள், ஏற்கனவே கேட்கப்பட்ட குரல்களைக் கொண்டவையாகத் தோன்றினாலும் அந்தப் பாண்டுவின் மகனால் அந்தச் சந்தர்ப்பத்தில் அவற்றை அடையாளம் காண முடியவில்லை.(38) குரல்களை அடையாளம் காண முடியாத தர்மனின் மகன் யுதிஷ்டிரன், "நீங்கள் யார்? ஏன் இங்கே இருக்கிறீர்கள்?" என்று விசாரித்தான்.(39)

இவ்வாறு சொல்லப்பட்டதும் அவர்கள் அனைத்துப் பக்கங்களில் இருந்தும், "நான் கர்ணன்", "நான் பீமசேனன்", "நான் அர்ஜுனன்",(40) "நான் நகுலன்", "நான் சகாதேவன்", "நான் திருஷ்டத்யும்னன்", "நான் திரௌபதி", "நாங்கள் திரௌபதியின் மகன்கள்" என்று பதிலளித்தனர். ஓ! மன்னா, இவ்வாறே அந்தக் குரல்கள் பேசின.(41)

ஓ! மன்னா, அந்த இடத்திற்குத் தகுந்த துன்பக் குரல்களில் வெளிவந்த அந்தக் கதறல்களைக் கேட்ட அரசன் யுதிஷ்டிரன், தனக்குள்ளேயே, "என்ன முரண்பட்ட விதியிது?(42) கடும் நெடியும், பெருந்துன்பமும் கொண்ட இந்த உலகத்தில் வசிப்பிடம் ஒதுக்கப்படுவதற்கு, உயர் ஆன்மாக்களான கர்ணர், திரௌபதியின் மகன்கள், கொடியிடையாளான பாஞ்சால இளவரசி {திரௌபதி} ஆகியோரால் இழைக்கப்பட்ட பாவச் செயல்கள் என்னென்ன? அறச்செயல்களைச் செய்த இவர்களால் செய்யப்பட்ட எந்த விதிமீறலையும் நான் உணரவில்லை.(43,44) திருதராஷ்டிரர் மகனான மன்னன் சுயோதனனும் {துரியோதனனும்}, பாவம் நிறைந்த அவனது தொண்டர்களும், இத்தகைய செழிப்பை அடைவதற்கு அவர்கள் செய்த செயலென்ன?(45) பெரும் இந்திரனைப் போலச் செழிப்புடன் கூடிய அவன் இங்கே உயர்வாகத் துதிக்கப்படுகிறான். எந்தச் செயல்களின் விளைவால் இவர்கள் (இந்த உயர் ஆன்மாக்கள்) நரகத்திற்குள் வீழ்ந்தனர்?(46) இவர்கள் அனைவரும், ஒவ்வொரு கடமையையும் அறிந்தவர்களாகவும், வாய்மைக்கும், வேதங்களுக்கும் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும், க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றியவர்களாகவும், தங்கள் செயல்பாடுகளில் நீதிமிக்கவர்களாகவும், வேள்விகளைச் செய்பவர்களாகவும், பிராமணர்களுக்குப் பெருங்கொடை அளிப்பவர்களாகவும் இருந்தனர்.(47) நான் உறங்குகிறேனா? விழித்திருக்கிறேனா? நான் சுயநினைவுடன் இருக்கிறானா இல்லையா? அல்லது என் மூளை கலங்கி இவையாவும் என் மன மயக்கத்தால் தெரிகிறதா?" என்று {தனக்குள்ளேயே} கேட்டுக் கொண்டான்.(48)

கவலை மற்றும் துன்பத்தில் மூழ்கி, துயரால் கலங்கிய புலன்களுடன் கூடிய மன்னன் யுதிஷ்டிரன் இத்தகைய சிந்தனைகளிலேயே நீண்ட காலம் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.(49) பிறகு தர்மனின் அரசமகன் கடுங்கோபத்தை அடைந்தான். உண்மையில், யுதிஷ்டிரன் தேவர்களையும், தர்மனையும் நிந்தித்தான்.(50) கடும் நெடியால் பீடிக்கப்பட்ட அவன் தேவதூதனிடம், "நீ எவர்களுடைய தூதனோ அவர்களிடம் நீ திரும்பிச் செல்வாயாக.(51) அவர்கள் இருக்கும் இடத்திற்கு நான் வர மாட்டேன் என்றும் இங்கே துன்பத்தில் இருக்கும் என்னுடன் பிறந்தோர் என் துணையின் விளைவால் ஆறுதலடைவதால் நான் இங்கேயே தங்கப் போகிறேன் என்று அவர்களிடம் சொல்வீராக" என்றான்.(52)

நுண்ணறிவுமிக்கப் பாண்டுவின் மகனால் இவ்வாறு சொல்லப்பட்ட தேவதூதன், நூறு வேள்விகளைச் செய்த தேவர்களின் தலைவன் {இந்திரன்} இருக்கும் இடத்திற்குத் திரும்பிச் சென்றான்.(53) அங்கே அவனிடம் யுதிஷ்டிரனின் செயல்களை விளக்கிச் சொன்னான். உண்மையில், ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, அவன் {தேவதூதன்} தர்மனின் மகன் சொன்ன அனைத்தையும் இந்திரனிடம் தெரிவித்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(54)

ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 2ல் உள்ள சுலோகங்கள் : 54
இன்னும் 4 பகுதிகளே உள்ளன. அத்துடன் முழு மஹாபாரதம் நிறைவுபெறுகிறது.


ஆங்கிலத்தில் | In English

மூன்றாம் சோதனை! - ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 3

மகாபாரதம், Mahabharatham in Tamil, மஹாபாரதம், Tamil Mahabharata



மூன்றாம் சோதனை! - ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 3

The third test! | Svargarohanika-Parva-Section-3 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனின் உறுதியைக் கண்டு வந்த இந்திரன்; யுதிஷ்டிரனைப் புகழ்ந்த யமன்; தெய்வீக உடல் பெற்று தெய்வீக முனிவர்கள் துதிக்கத் தம்பியரிடம் சென்ற யுதிஷ்டிரன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! குரு குலத்தோனே பிருதையின் மகனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன்அங்கே ஒரு கணம் நிற்பதற்குள் இந்திரனின் தலைமையிலான தேவர்கள் அனைவரும் அந்த இடத்திற்கு வந்தனர்.(1) அறத் தேவன் {தர்மதேவன்}, அந்த ஏகாதிபதியைக் காணத் தன் உடல் கொண்ட வடிவத்துடன் அந்த இடத்திற்கு வந்தான்.(2) ஒளியுடல் பெற்றவர்களும், புனிதமானவர்களும், உன்னதச் செயல்களைச் செய்பவர்களுமான தேவர்கள் அந்த இடத்திற்கு வந்ததும், அந்தப் பகுதியை மூழ்கடித்த இருள் உடனே விலகியது.(3) பாவச் செயல்களைச் செய்தோர் அப்போது மேலும் துன்புறுத்தப்படவில்லை. வைதரணீ ஆறு, முள்ளிலவமரம்,(4) இரும்புக் குடுவைகள், பார்ப்பதற்குப் பயங்கரமான பாறைகளாலான இரும்புத் திரள்களும் காட்சியில் இருந்து மறைந்து போயின. வெறுத்தொதுக்கப்படுவதும், குரு மன்னனால் {யுதிஷ்டிரனால்} பார்க்கப்பட்டதுமான பல்வேறு சடலங்கள் ஒரே நேரத்தில் மறைந்து போயின.(5) ஓ! பாரதா, இனிமையானதும், முற்றிலும் தூய்மையானதும், குளுமையானதும், இனிய நறுமணமிக்கதுமான தென்றல் தேவர்கள் இருப்பதன் விளைவால் அந்த இடத்தில் வீசத் தொடங்கியது.(6) மருத்துகள், இந்திரன், அசுவினி இரட்டையர்களுடன் கூடிய வசுக்கள், சாத்யர்கள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள், சொர்க்கவாசிகள் பிறர்,(7) சித்தர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோர் அனைவரும் பெருஞ்சக்தி கொண்ட தர்மனின் அரசமகன் இருக்கும் இடத்திற்கு வந்தனர்.(8)


அப்போது தேவர்களின் தலைவனும், சுடர்மிக்கச் செழிப்புடன் கூடியவனுமான சக்ரன், யுதிஷ்டிரனிடம் அவனுக்கு ஆறுதலளிக்கும் வகையில்,(9) "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, வா, ஓ! மனிதர்களின் தலைவா, வருவாயாக. ஓ! பலமிக்கவனே, இந்தத் தோற்ற மயக்கங்கள் முடிந்தன.(10) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, உன்னால் வெற்றி அடையப்பட்டது, (இன்பம் நிறைந்த) நித்திய உலகங்களும் உனதாகின. நீ கோபவசப்படாதே. என்னுடைய இந்தச் சொற்களைக் கேட்பாயாக.(11) ஓ! மகனே, ஒவ்வொரு மன்னனாலும் நரகம் நிச்சயம் பார்க்கப்பட வேண்டும். ஓ! மனிதர்களின் தலைவா, நல்லவையும் அல்லவையும் இங்கே அதிகமாக இருக்கின்றன.(12)

முதலில் தன் நற்செயல்களுக்கான கனியை அனுபவிப்பவன் அதற்கடுத்து நரகத்தைத் தாங்கிக் கொள்ள வேண்டும். மறுபுறம், முதலில் நரகத்தைத் தாங்கிக் கொண்டவன் அதன் பிறகு சொர்க்கத்தை அனுபவிக்க வேண்டும்.(13) எவன் பாவச் செயல்களை அதிகம் செய்திருக்கிறானோ அவன் சொர்க்கத்தை முதலில் அனுபவிப்பான். ஓ! மன்னா, இதன் காரணமாகவே, உனக்கு நல்லதைச் செய்ய விரும்பிய நான், உன்னை முதலில் நரகத்தைக் காணச் செய்தேன்.(14) நீ பாசாங்கு செய்து துரோணரை அவரது மகன் {அஸ்வத்தாமன்} காரியத்தில் வஞ்சித்தாய். அதன் விளைவாகவே, ஒரு வஞ்சகச் செயலின் மூலம் உனக்கு நரகம் காட்டப்பட்டது.(15) உனக்கு ஏற்பட்டதைப் போலவே, பீமன், அர்ஜுனன், திரௌபதி ஆகிய அனைவருக்கும் ஒரு வஞ்சகச் செயல் மூலம் பாவிகளின் இடம் {நரகம்} காட்டப்பட்டது.(16)

ஓ! மனிதர்களின் தலைவா, வா, அவர்கள் அனைவரும் தங்கள் பாவங்களில் இருந்து தூய்மையடைந்தனர்.(17) உன் தரப்பில் இருந்து போரில் கொல்லப்பட்ட மன்னர்கள் அனைவரும் சொர்க்கத்தை அடைந்தனர். ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, வா, வந்து அவர்களைக் காண்பாயாக.(18) யாருக்காக நீ வருந்திக் கொண்டிருந்தாயோ அந்த வலிமைமிக்க வில்லாளியும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனுமான கர்ணனும், உயர்ந்த வெற்றியை அடைந்திருக்கிறான்.(19) ஓ! பலமிக்கவனே, மனிதர்களில் முதன்மையான சூரியனின் மகனை {கர்ணனை} இதோ பார். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, அவன் தனக்குரிய இடத்தில் இருக்கிறான். ஓ! மனிதர்களின் தலைவா, உன்னுடைய இந்தக் கவலையைக் கொல்வாயாக.(20) உன்னுடன் பிறந்தோரையும், பிறரையும், உன் தரப்பில் இருந்த மன்னர்களையும் இதோ பார். இவர்கள் அனைவரும் தங்களுக்குரிய (இன்ப) உலகங்களை அடைந்திருக்கின்றனர்.(21)

முதலில் கொஞ்சம் துன்பத்தை அனுபவித்த நீ, ஓ! குரு குலத்தின் மகனே, இந்நேரத்தில் இருந்து துயரங்களற்றவனாக, நோய்கள் அனைத்தும் விலகியவனாக என்னுடன் இன்பமாக விளையாடிக் கொண்டிருப்பாய்.(22) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, ஓ! மன்னா, உன் அறச்செயல்கள் அனைத்தின் மூலம் வென்ற வெகுமதிகளையும், உன் தவங்கள் மற்றும் உன் கொடைகள் அனைத்தின் மூலமாக நீ அடைந்த உலகங்களையும் இனி நீ அனுபவிப்பாயாக.(23) தேவர்கள், கந்தர்வர்கள், தூய உடைகள் மற்றும் சிறந்த ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தெய்வீக அப்சரஸ்கள் உனக்காகக் காத்திருந்து, உன் மகிழ்ச்சிக்காகத் தொண்டாற்றட்டும்.(24) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, உன்னால் பயன்படுத்தப்பட்ட வேள்வி வாளால் மேம்படுத்தப்பட்ட சிறப்புகளுடன் நீ செய்த ராஜசூய வேள்வியின் மூலம் உனதாகியிருக்கும் இந்த உலகங்களை இனி நீ அனுபவிப்பாயாக. உன் தவங்களின் உயர்ந்த கனிகளை நீ அனுபவிப்பாயாக.(25)

ஓ! யுதிஷ்டிரா, உன் உலகங்கள் அந்த மன்னர்களின் உலகங்களை விட மிக உயரத்தில் இருக்கின்றன. ஓ! பிருதையின் மகனே, அவை ஹரிச்சந்திரனின் உலகங்களுக்கு இணையானவை. வா, அங்கே அருள்நிலையில் நீ விளையாடிக் கொண்டிருப்பாயாக.(26) அரசமுனியான மாந்தாத்ரி {மாந்தாதா} எங்கே இருக்கிறானோ, மன்னன் பகீரதன் எங்கே இருக்கிறானோ, துஷ்மந்தன் {துஷ்யந்தன்} மகனான பரதன் எங்கிருக்கிறானோ அங்கே நீயும் அருள்நிலையில் விளையாடிக் கொண்டிருப்பாய்.(27) புனிதமானவளும், மூவுலகங்களையும் புனிதப்படுத்துபவளுமான தெய்வீக கங்கை {ஆகாயக் கங்கை} இதோ இருக்கிறாள். இவள் தெய்வீக கங்கை என்றழைக்கப்படுகிறாள். இதில் மூழ்கி நீ உன் சொந்த உலகத்திற்குச் செல்வாயாக[1].(28) இந்த ஓடையில் {கங்கையில்} நீராடும் நீ உன் மனித இயல்பை இழப்பாய். உண்மையில் உன் துயரம் அகன்று, நோய்கள் வெல்லப்பட்டு, பகைமைகள் அனைத்தில் இருந்தும் நீ விடுபடுவாய்" என்றான் {இந்திரன்}.(29)

[1] "கங்கை மூவழிகளைக் கொண்டவளாவாள். சொர்க்கத்தில் சுரதுனி அல்லது மந்தாகினி என்றழைக்கப்படுகிறாள்; பூமியில் கங்கை என்றழைக்கப்படுகிறாள்; பாதாள லோகத்தில் அவள் போகவதி என்றழைக்கப்படுகிறாள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! குரு மன்னா {யுதிஷ்டிரா}, தேவர்களின் தலைவன் இவ்வாறு யுதிஷ்டிரனிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது, உடல் கொண்ட வடிவத்துடன் கூடிய அற தேவன் {தர்மதேவன் யமன்}, தன் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்},(30) "ஓ! மன்னா, ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, ஓ! மகனே, என்னிடம் நீ கொண்டுள்ள அர்ப்பணிப்பிலும், வாக்கில் நீ கொண்டிருக்கும் வாய்மையிலும், நீ கொண்டிருக்கும் பொறுமை மற்றும் தற்கட்டுப்பாட்டிலும் நான் பெரும் நிறைவடைகிறேன்.(31) ஓ! மன்னா, இது நான் உனக்கு வைத்த மூன்றாவது சோதனையாகும். ஓ! பிருதையின் மகனே, நீ உன் இயல்பில் இருந்தோ, அறிவில் இருந்தோ பிறழாதவன்.(32) முன்பு துவைத வனத்தில் அணிக்கட்டைகளை மீட்பதற்காகத் தடாகத்திற்கு வந்தபோது என் கேள்விகளால் நான் உன்னைச் சோதித்தேன். நீ அதை நன்றாகத் தாக்குப்பிடித்தாய்.(33) ஓ! மகனே அதன் பிறகு நாயின் வடிவை ஏற்று, உன்னுடன் பிறந்தோரும், திரௌபதியும் வீழ்ந்தபோது நான் மீண்டும் உன்னைச் சோதித்தேன்.(34)

இஃது உனக்கான மூன்றாவது சோதனையாகும்; உன்னுடன் பிறந்தோருக்காக நீ நரகத்திலேயே வசிப்பதற்கான உன் விருப்பத்தைத் தெரிவித்தாய். ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, நீ தூய்மையடைந்தாய். பாவத்தில் இருந்து தூய்மையடைந்து நீ மகிழ்ச்சியாக இருப்பாயாக.(35) ஓ! பிருதையின் மகனே, ஓ! மன்னா, உன்னுடன் பிறந்தோரும் நரகத்திற்குத் தகுந்தவர்களல்ல. இவையனைத்தும் தேவர்களின் தலைவனால் உண்டாக்கப்பட்ட தோற்ற மயக்கங்களாகும்.(36) ஓ! மகனே, மன்னர்கள் அனைவரும் நிச்சயம் ஒருமுறை நரகத்தைப் பார்க்க வேண்டும். எனவே, நீ சிறிது நேரம் இந்தப் பெருந்துன்பத்திற்கு உட்படுத்தப்பட்டாய்.(37) ஓ! மன்னா, பேச்சில் எப்போதும் வாய்மை நிறைந்தவர்களும், பெருந்துணிவைக் கொண்டவர்களுமான அர்ஜுனனோ, பீமனோ, முதன்மையான மனிதர்களான இரட்டையர்களோ {நகுல சகாதேவர்களோ}, கர்ணனோ நீண்ட கால நரகத்திற்குத் தகுந்தவர்களல்ல.(38) ஓ! யுதிஷ்டிரா, இளவரசி கிருஷ்ணையும் {திரௌபதியும்} கூடப் பாவிகளின் இடத்திற்குத் தகுந்தவளல்ல. வா, ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, வந்து மூவுலகங்களிலும் தன் ஓடையை விரித்திருக்கும் கங்கையைக் காண்பாயாக" என்றான் {யமன்}.(39)

இவ்வாறு சொல்லப்பட்டவனும், அரசமுனியுமான உன் பாட்டன் {யுதிஷ்டிரன்}, தர்மனுடனும், வேறு தேவர்களுடனும் சென்றான்.(40) புனிதமானதும், புனிதப்படுத்துவதும், முனிவர்களால் எப்போதும் துதிக்கப்படுவதுமான தெய்வீக ஆறான கங்கையில் நீராடி அவன் {யுதிஷ்டிரன்} தன் மனித உடலைக் கைவிட்டான்.(41) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் தெய்வீக வடிவை ஏற்றதன் விளைவால், தன் பகைமைகள் மற்றும் துன்பங்கள் அனைத்தும் களைந்தவனானான்.(42) பிறகு, தேவர்களால் சூழப்பட்ட குரு மன்னன் யுதிஷ்டிரன், அந்த இடத்தில் இருந்து சென்றான். தர்மனின் துணையுடன் கூடிய அவன், பெரும் முனிவர்களால் புகழப்பட்டான்.(43) உண்மையில் அவன் {யுதிஷ்டிரன்}, (மனித) கோபத்தில் இருந்து விடுபட்டுத் தங்கள் தங்களுக்குரிய நிலைகளை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களும், மனிதர்களில் முதன்மையானவர்களும், வீரர்களுமான பாண்டவர்களும், தார்தராஷ்டிரர்களும் இருந்த இடத்தை அடைந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(44)

ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 3ல் உள்ள சுலோகங்கள் :44
இன்னும் 3 பகுதிகளே உள்ளன. அத்துடன் முழு மஹாபாரதம் நிறைவுபெறுகிறது.



ஆங்கிலத்தில் | In English

அடையாள பவனி! - ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 4

மகாபாரதம், Mahabharatham in Tamil, மஹாபாரதம், Tamil Mahabharata




அடையாள பவனி! - ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 4

Identity jaunt! | Svargarohanika-Parva-Section-4 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : கிருஷ்ணன், கர்ணன் முதலியோரைக் கண்ட யுதிஷ்டிரன்; தங்கள் தங்களுக்குரிய கதியை அடைந்தவர்களை யுதிஷ்டிரனுக்குச் சுட்டிக் காட்டிய இந்திரன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தேவர்கள், மருத்துகள் மற்றும் முனிவர்களால் இவ்வாறு புகழப்பட்ட மன்னன் யுதிஷ்டிரன், குரு குலத்தின் முதன்மையானோர் இருந்த இடத்திற்குச் சென்றான்.(1) அவன் கோவிந்தனை {கிருஷ்ணனை} அவனது பிரம்ம வடிவில் கண்டான். ஏற்கனவே தான் கண்டிருந்த வடிவத்திற்கு ஒப்பானதாக இருந்தது அடையாளம் காண துணை புரிந்தது.(2) தன்னுடைய அந்த வடிவில் அவன், பயங்கரமான சக்கரம் போன்ற தெய்வீக ஆயுதங்களால் அலங்கரிக்கப்பட்டு ஒளிபொருந்தியவனாக இருந்தான். மற்ற ஆயுதங்கள் தங்களுக்குரிய உடல் வடிவங்களைப் பெற்று இருந்தன.(3)


அவன் {கிருஷ்ணன்} சுடர்மிக்கப் பிரகாசம் கொண்ட வீரப் பல்குனனால் {அர்ஜுனனால்} துதிக்கப்பட்டான். குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, மதுசூதனனை அவனுடைய சொந்த வடிவில் கண்டான்.(4) தேவர்களால் துதிக்கப்பட்ட அவ்விருவரும் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} யுதிஷ்டிரனைக் கண்டு, அவனை உரிய மதிப்புடன் வரவேற்றனர்.(5) மற்றோரிடத்தில், அந்தக் குருக்களைத் திளைக்கச் செய்பவன் {யுதிஷ்டிரன்}, ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனும், காந்தியில் பனிரெண்டு சூரியர்களுக்கு ஒப்பானவனுமான கர்ணனைக் கண்டான்.(6)

மற்றொரு பகுதியில், மருத்துகளுக்கு மத்தியில் சுடர்மிக்க வடிவில் அமர்ந்திருக்கும் பெரும்பலம் கொண்ட பீமசேனனைக் கண்டான்[1].(7) அவன் {பீமன்} உடல் வடிவத்துடன் கூடிய வாயு தேவனின் அருகில் அமர்ந்திருந்தான். உண்மையில், அப்போது தெய்வீக வடிவில் பேரெழிலுடன் திகழ்ந்த அவன் உயர்ந்த வெற்றியை அடைந்திருந்தான்.(8) அந்தக் குருக்களைத் திளைக்கச் செய்பவன் {யுதிஷ்டிரன்}, அஸ்வினிகளுக்குரிய இடத்தில் சுயப் பிரகாசத்தில் சுடர்விடும் நகுலனையும், சகாதேவனையும் கண்டன்.(9)

[1] "தேவனை முதலிய என்பது பீமன் பூமியில் கண்ட அதே வடிவில் காணப்பட்டான் எனப் பொருள்படலாம். உண்மையில், கோவிந்தன், பல்குனன், பீமன் ஆகியோர் அனைவரும் சுடர்மிக்க வடிவங்களில் இருந்தாலும், பூமியில் இருந்த தங்கள் வடிவங்களுடன் ஒத்த வடிவங்களைக் கொண்டிருந்தனர் என்று பல இடங்களில் பொருள்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

மேலும் அவன், தாமரை மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட பாஞ்சால இளவரசியையும் {திரௌபதியையும்} கண்டான். சொர்க்கத்தை அடைந்த அவள், சூரியப்பிரகாசத்துடன் கூடிய வடிவில் அங்கே அமர்ந்து கொண்டிருந்தாள்.(10) மன்னன் யுதிஷ்டிரன் திடீரென அவளைக் {திரௌபதியைக்} கேள்வி கேட்க விரும்பினான். அப்போது தேவர்களின் தலைவனான இந்திரன், அவனிடம் {யுதிஷ்டிரனிடம்},(11) "இவள் ஸ்ரீ {திருமகள்} ஆவாள். ஓ! யுதிஷ்டிரா, மனிதர்களுக்கு மத்தியில் ஏற்புடைய நறுமணத்துடனும், மொத்த உலகத்தையும் மகிழ்ச்சியடையச் செய்யும் வல்லமையுடனும், எந்தத் தாயின் கருவறையில் இருந்தும் வெளிப்படாமல் துருபதன் மகளாக இவள் {திரௌபதி} உனக்காகவே பிறந்தாள்.(12) திரிசூலபாணியால் உன் இன்பத்திற்காகவே இவள் படைக்கப்பட்டாள். துருபதன் குலத்தில் பிறந்த இவள் உங்கள் அனைவராலும் அனுபவிக்கப்பட்டாள்.(13)

ஓ! மன்னா, நெருப்பின் பிரகாசத்தையும் பெருஞ்சக்தியையும், உயர்ந்த அருளையும் கொண்ட இந்த ஐந்து கந்தர்வர்களும், திரௌபதிக்கும் உனக்கும் மகன்களாக இருந்தனர்.(14) பெரும் ஞானம் கொண்டவனும், கந்தர்வர்களின் மன்னனுமான திருதராஷ்டிரனைப் பார். இவனே உன் தந்தையின் {பாண்டுவின்} அண்ணன் என்பதை அறிவாயாக.(15)

நெருப்பின் பிரகாசம் கொண்டவனும், குந்தியின் மகனுமான இவன் {கர்ணன்} உன் அண்ணனாவான். சூரியனின் மகனும், உன் அண்ணனும், மனிதர்களில் முதன்மையானவனுமான இவனே ராதையின் மகனாக {கர்ணனாக} அறியப்பட்டான்.(16) இவன் சூரியனின் துணையுடன் திரிகிறான். இந்த முதன்மையானவனைப் பார். சாத்யர்கள், தேவர்கள், விஷ்வேதேவர்கள், மருத்துகளின் இனக்குழுக்களுக்கு மத்தியில்,(17) ஓ! மன்னர்களின் மன்னா, சாத்யகியைத் தங்களில் முதல்வனாகக் கொண்ட வீரர்களும், போஜர்களில் வலிமைமிக்கவர்களுமான விருஷ்ணி மற்றும் அந்தகக் குலத்தின் வலிமைமிக்கத் தேர்வீரர்களைப் பார்.(18) போரில் வெல்லப்பட முடியாதவனான சுபத்திரையின் மகன் {அபிமன்யு} இப்போது சோமனுடன் இருப்பதைப் பார். இரவின் பேரொளிக் கோளின் மென்மையான பிரகாசத்துடன் கூடியவனாக இருக்கும் இவனே வலிமைமிக்க வில்லாளியான அபிமன்யு ஆவான்.(19)

குந்தி மற்றும் மாத்ரியுடன் இப்போது சேர்ந்திருக்கும் வலிமைமிக்க வில்லாளியான பாண்டு இதோ இருக்கிறான். உன் தந்தை {பாண்டு} தன் சிறந்த தேரில் அடிக்கடி என்னிடம் வருவான்.(20) இப்போது வசுக்களின் மத்தியில் இருக்கும் சந்தனுவின் மகனான அரசன் பீஷ்மரைப் பார். இதோ பிருஹஸ்பதியின் அருகில் இருக்கும் இவர் உன் ஆசானான துரோணர் என்பதை அறிவாயாக.(21) ஓ! பாண்டுவின் மகனே, இவர்களும், உன் தரப்பில் இருந்து போரிட்ட பிற வீரர்களும், இப்போது கந்தர்வர்கள், யக்ஷர்கள் மற்றும் வேறு புனிதர்களுடன் நடமாடுகிறார்கள்.(22) ஓ! மன்னா, சிலர் குஹ்யர்களின் நிலையை அடைந்திருக்கின்றனர். தங்கள் உடல்களைக் கைவிட்ட அவர்கள், சொல், எண்ணம் மற்றம் செயலின் மூலம் அடைந்த தகுதியைக் கொண்டு சொர்க்கத்தை வென்றனர்" என்றான் {இந்திரன்}".(23)

ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 4ல் உள்ள சுலோகங்கள் :23
இன்னும் 2 பகுதிகளே உள்ளன. அத்துடன் முழு மஹாபாரதம் நிறைவுபெறுகிறது.



ஆங்கிலத்தில் | In English

பாரத மகிமை! - ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 5

மகாபாரதம், Mahabharatham in Tamil, மஹாபாரதம், Tamil Mahabharata






பாரத மகிமை! - ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 5

The greatness of Bharata! | Svargarohanika-Parva-Section-5 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : பீஷ்மர் முதலியோர் ஸ்வர்க்கத்தை அனுபவித்துத் தங்கள் தங்கள் தேவ வடிவில் கலந்ததை ஜனமேஜயனுக்குச் சொன்ன வைசம்பாயனர்; ஆஸ்தீகர் முதலியோரை வழிபட்டு, யாகத்தை முடித்து, ஹஸ்தினாபுரம் வந்து அரசாட்சி செய்த ஜனமேஜயன்; பாரதக் கதையை முடித்து அதன் மகிமையைக் கூறிய சௌதி...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "உயர் ஆன்மாக்களான பீஷ்மர் மற்றும் துரோணர் இருவரும், மன்னன் திருதராஷ்டிரன், விராடன், துருபதன், சங்கன், உத்தரன்,(1) திருஷ்டகேது, ஜயத்சேனன், மன்னன் சத்யஜித், துரியோதனனின் மகன், சுபலனின் மகனான சகுனி,(2) பேராற்றல் கொண்ட கர்ணனின் மகன்கள், மன்னன் ஜெயத்ரதன், கடோத்கசன், நீர் குறிப்பிடாத வேறு சிலர்,(3) சுடர்மிக்க வடிவங்களைக் கொண்ட வேறு வீர மன்னர்கள் ஆகியோர் சொர்க்கத்தில் எவ்வளவு காலம் இருந்தனர்.(4) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அவர்களுடைய இடம் சொர்க்கத்தில் நித்தியமானதா? அவர்களுடைய செயல்கள் {கர்ம பலன்கள்} தீர்ந்ததும் அந்த முதன்மையானவர்கள் அடைந்த கதியென்ன?(5) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நான் இதைக் கேட்க விரும்புவதால் உம்மைக் கேட்கிறேன். உமது ஒளிபொருந்திய தவத்தின் மூலம் நீர் அனைத்தையும் காண்பவராவீர்" என்றான் {ஜனமேஜயன்}".(6)


சௌதி {சௌனகர் தலைமையில் இருந்த முனிவர் கூட்டத்திடம்|} சொன்னார், "இவ்வாறு கேட்கப்பட்ட அந்த மறுபிறப்பாள முனிவர் {வைசம்பாயனர்}, உயர் ஆன்ம வியாசரிடம் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, அந்த மன்னனின் கேள்விக்குப் பதிலளிப்பதில் தம்மை நிறுவிக் கொண்டார்.(7)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மனிதர்களின் மன்னா, ஒவ்வொருவனும் தன் செயல்களின் இறுதியில் தன் சொந்த இயல்புக்குத் திரும்ப இயன்றவனல்ல. உண்மையில் இஃது இவ்வாறு இருந்தாலும், இல்லாவிட்டாலும் உன்னால் கேட்கப்பட்டது நல்ல கேள்வியே.(8) ஓ! மன்னா, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இந்தத் தெய்வீகப் புதிரை {தேவரகசியத்தைக்} கேட்பாயாக. ஓ! கௌரவ்யா, வலிமையும், சக்தியும், தெய்வீகப் பார்வையும், பேராற்றலையும் கொண்டவரும், புராதன தவசியும், பராசரர் மகனும், உயர்ந்த நோன்புகளை எப்போதும் நோற்பவரும், செயல்கள் அனைத்துடன் இணைந்த கதியை அறிந்தவருமான வியாசரால் (எங்களுக்கு) இது விளக்கப்பட்டது.(9,10)

வலிமையும், சக்தியும், பெரும்பிரகாசமும் கொண்ட பீஷ்மர், வசுக்களின் நிலையை அடைந்தார். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அஷ்ட வசுக்கள் இப்போது காணப்படுகின்றனர்.(11) துரோணர், அங்கீரஸ வழித்தோன்றல்களில் முதன்மையான பிருஹஸ்பதிக்குள் நுழைந்தார். ஹிருதிகன் மகனான கிருதவர்மன் மருத்துகளுக்குள் நுழைந்தான்.(12) பிரத்யும்னன் சனத்குமாரருக்குள் நுழைந்தான். திருதராஷ்டிரன், அடைதற்கரிதானதும், கருவூலத் தலைவனுக்குரியதுமான உலகத்தை {குபேரலோகத்தை / யக்ஷர்களின் உலகத்தை} அடைந்தான்.(13) புகழ்பெற்றவளான காந்தாரி தன் கணவன் திருதராஷ்டிரன் அடைந்த அதே உலகத்தை அடைந்தாள். பாண்டு தன் இரு மனைவியருடன் பெரும் இந்திரனின் வசிப்பிடத்திற்குச் சென்றான்.(14) விராடன், துருபதன், மன்னன் திருஷ்டகேது, நிசடன், அக்ரூரர், சாம்பன், பானுகம்பன், விதூரதன்,(15) பூரிஸ்ரவஸ், சலன், மன்னன் பூரி, கம்ஸன், உக்ரஸேனன், வசுதேவர்,(16) மனிதர்களில் முதன்மையான உத்தரன், சங்கன் ஆகிய முதன்மையான மனிதர்கள் அனைவரும் தேவர்களிடம் நுழைந்தார்கள்.(17)

பேராற்றல் கொண்டவனும், வலிமையும், சக்தியும் கொண்டவனும், வர்ச்சஸ் என்ற பெயரைக் கொண்டவனுமான சோமனின் மகன், மனிதர்களில் சிங்கமான பல்குனன் {அர்ஜுனன்} மகனான அபிமன்யுவானான்.(18) க்ஷத்திரிய நடைமுறைகளுக்கு இணக்கமான முறையில் வேறு எவராலும் வெளிப்படுத்த முடியாத துணிச்சலுடன் போரிட்ட அந்த வலிய கரங்களைக் கொண்ட அற ஆன்மாவானாவன் சோமனுக்குள் நுழைந்தான்.(19) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, போரில் கொல்லப்பட்ட கர்ணன் சூரியனுக்குள் நுழைந்தான். சகுனி துவாரனுக்குள்ளும், திருஷ்டத்யும்னன் நெருப்பின் தேவனுக்குள்ளும் ஈர்க்கப்பட்டனர்.(20) திருதராஷ்டிரன் மகன்கள் அனைவரும் கடும் சக்தி கொண்ட ராட்சசர்களாவர். ஆயுதங்களால் அடைந்த மரணத்தால் புனிதமடைந்தவர்களும், பெருஞ்செழிப்பைக் கொண்டவர்களுமான அந்த உயர் ஆன்மாக்கள் அனைவரும் சொர்க்கத்தை அடைந்தனர்.(21) க்ஷத்ரி {விதுரர்}, மன்னன் யுதிஷ்டிரன் ஆகிய இருவரும் அற தேவனுக்குள் நுழைந்தனர். புனிதமானவனும், சிறப்புமிக்கவனுமான அனந்தன் (பலராமனாகப் பிறந்தவன்) பூமிக்குக் கீழுள்ள உலகத்திற்குச் சென்றான்.(22) பெரும்பாட்டனின் {பிரம்மனின்} ஆணையின் பேரிலும், யோகசக்தியின் துணையுடனும் அவன் பூமியை ஆதரித்தான்.

வாசுதேவன் {கிருஷ்ணன்}, நாராயணன் என்றழைக்கப்படும் தேவர்களின் நித்திய தேவனுடைய ஒரு பகுதியாவான். அதன்படியே அவன் நாராயணனுக்குள் நுழைந்தான்.(23) பதினாராயிரம் {16,000} பெண்கள் வாசுதேவனுக்கு மனைவியராக மணந்து கொடுக்கப்பட்டனர். ஓ! ஜனமேஜயா, வேளை வந்தபோது அவர்கள் சரஸ்வதிக்குள் மூழ்கினர்.(24) அங்கே அவர்களது (மனித) உடலைக் கைவிட்ட அவர்கள் சொர்க்கத்திற்கு உயர்ந்தனர். பிறகு அவர்கள் அப்சரஸ்களாக மாறி, வாசுதேவனின் முன்னிலையை அடைந்தனர்.(25) வீரர்களும், கடோத்கசன் மற்றும் பெரும் போரில் கொல்லப்பட்ட பிறரைப் போன்ற வலிமைமிக்கத் தேர்வீரர்களில் சிலர் தேவர்கள் மற்றும் சிலர் யக்ஷர்கள் என்ற நிலையை அடைந்தனர்.(26) துரியோதனனின் தரப்பில் போரிட்டவர்கள் ராட்சசர்கள் என்று சொல்லப்படுகின்றனர். ஓ! மன்னா, அவர்கள் அனைவரும் படிப்படியாகச் சிறந்த இன்பலோகங்களை அடைந்தனர்.(27) அந்த மனிதர்களில் முதன்மையான சிலர் இந்திரனின் வசிப்பிடத்திற்கும், வேறு சிலர் பெரும் நுண்ணறிவைக் கொண்ட குபேரனின் வசிப்பிடதிற்கும், இன்னும் சிலர் வருணனின் வசிப்பிடத்திற்கும் சென்றனர்.(28) ஓ! பெரும் காந்தியைக் கொண்டவனே, ஓ! பாரதா, குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு தரப்பினரின் செயல்கள் குறித்த அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன்" {என்றார் வைசம்பாயனர்}".(29)

சௌதி {சௌனகர் தலைமையில் இருந்த முனிவர் கூட்டத்திடம்|}  சொன்னார், "மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, இதை வேள்விச் சடங்குகளின் இடைவெளிகளில் கேட்ட மன்னன் ஜனமேஜயன் ஆச்சரியத்தில் நிறைந்தான்.(30) பிறகு வேள்விப் புரோகிதர்கள், இன்னும் எஞ்சியிருந்த சடங்குகளை நிறைவடையச் செய்தனர். பாம்புகளை (கொடிய மரணத்தில் இருந்து) காத்த ஆஸ்தீகர் பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தார்.(31) மன்னன் ஜனமேஜயன் பிராமணர்கள் அனைவருக்கும் அபரிமிதமான கொடைகளைக் கொடுத்து நிறைவடையச் செய்தான். இவ்வாறு மன்னனால் வழிபடப்பட்ட அவர்கள் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.(32) கல்விமான்களான அந்தப் பிராமணர்களுக்கு விடைகொடுத்து அனுப்பிய மன்னன் ஜனமேஜயன், தக்ஷசீலத்தில் இருந்து யானையின் பெயரால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பினான்.(33) மன்னனின் {ஜனமேஜயனின்} பாம்பு வேள்வியில், வியாசரின் ஆணையின் பேரில் வைசம்பாயனர் சொன்ன அனைத்தையும் நான் உமக்குச் சொல்லிவிட்டேன்.(34)

வரலாறு {இதிஹாஸம்} என்றழைக்கப்படும் இது புனிதமானதும், புனிதப்படுத்துவதும், சிறந்ததுமாகும். ஓ! பிராமணரே {சௌனகரே}, வாய்மைநிறைந்த பேச்சைக் கொண்ட தவசி கிருஷ்ணரால் {வியாசரால்} இது தொகுக்கப்பட்டது.(35) அவர், அனைத்தையும் அறிந்தவரும், விதிகள் அனைத்தையும், அறிந்தவரும், அனைத்துக் கடமைகளின் அறிவைக் கொண்டவரும், பக்தியுடையவரும், புலன்களுக்கு அப்பாற்பட்டவற்றை உணரக்கூடியவரும் {அதீந்திரியரும்}, தூயவரும், தவங்களால் தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்டவரும்,(36) ஆறு உயர்ந்த குணங்களைக் கொண்டவரும், சாங்கிய யோகத்திற்குத் தம்மை அர்ப்பணித்தவரும் ஆவார். அவர் {வியாசர்}, பல்வேறு கதைகளால் தூய்மையடைந்த தெய்வீகப் பார்வையில் அனைத்தையும் கண்டு இதைத் தொகுத்தார்.(37) அவர் பாண்டவர்கள் மற்றும் சக்தி எனும் அபரிமித செல்வத்தைக் கொண்ட பிற க்ஷத்திரியர்களின் புகழை உலகம் முழுவதும் பரப்ப விரும்பி இதைச் செய்தார்.(38)

எந்தக் கல்விமான், செவிப்புலம் கேட்பதற்கு மத்தியில் புனித நாட்களில் இந்த வரலாற்றை உரைப்பானோ அவன், அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்தவனாகச் சொர்க்கத்தை வென்று, பிரம்ம நிலையை அடைவான்.(39) எந்த மனிதன், (தீவில் பிறந்தவரான) கிருஷ்ணரால் {வியாசரால்} தொகுக்கப்பட்ட இந்த வேதத்தை முழுமையாக உரைக்கும்போது, குவிந்த கவனத்துடன் கேட்பானோ, பிராமணக் கொலை {பிரம்மஹத்தி} போன்ற கொடும்பாவங்களின் வரிசையில் வரும் அவனுடைய லட்சக்கணக்கான பாவங்களையும் அது கழுவிவிடும்.(40) ஒரு சிராத்தத்தில் இந்த வரலாற்றின் சிறு பகுதியையாவது உரைக்கும் மனிதனின் பித்ருக்கள், வற்றாத உணவு மற்றும் பானத்தை அடைகிறார்கள்[1].(41) ஒருவன் தன் புலன்களைக் கொண்டோ, மனத்தைக் கொண்டோ பகலில் செய்யும் பாவங்கள், மாலையில் மஹாபாரதத்தின் ஒரே ஒரு பகுதியை உரைப்பதன்மூலம் கழுவப்படுகின்றன.(42) ஒரு பிராமணன் இரவில் பெண்களுக்கு மத்தியில் எத்தகைய பாவங்கள் புரிந்தாலும், விடியலில் மஹாபாரதத்தின் ஒரே ஒரு பகுதியை உரைப்பதன் மூலம் கழுப்படுகின்றன.(43) உயர்ந்த குலத்தைச் சேர்ந்த பாரதர்களே {பரதனின் வாரிசுகளே} இதன் தலைப்பாகிறார்கள். எனவே இது பாரதம் என்றழைக்கப்படுகிறது. பாரதர்களையே தலைப்பாகக் கொண்டதும், மேலும் மிக முக்கியமானவற்றைக் கொண்டதுமாக இருப்பதால் இது மஹாபாரதம் என்றழைக்கப்படுகிறது[2].(44) இந்தப் பெரும் ஆய்வின் பொருள் விளக்கங்களை நன்கறிந்த ஒருவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைகிறான். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அத்தகைய மனிதன் அறம், பொருள் மற்றும் இன்பத்துடன் வாழ்ந்து, வீட்டையும் {மோட்சத்தையும்} அடைகிறான்[3].(45) எது இங்கே தோன்றுமோ அஃது எங்கும் தோன்றும். எது இங்கே தோன்றாதோ அஃது எங்கும் தோன்றாது. இந்த வரலாறு ஜயம் என்ற பெயரில் அறியப்படுகிறது. முக்தியில் {மோட்சத்தில்} விருப்பமுள்ள அனைவராலும் இது கேட்கப்பட வேண்டும்[4].(46)

[1] "பாதம் என்று குறிப்பிடப்படுவது ஒரு சுலோகத்தின் ஓர் அடியைக் குறிக்கும். ஒரு ஸ்லோகத்தில் நான்கு பாதங்கள் இருக்கும். எனவே, ஒருவன் இந்த வரலாற்றின் ஒரு ஸ்லோகத்தின் ஒரேயொரு அடியை உரைத்தாலும் அவன் தன் பித்ருக்களுக்கு வற்றாத உணவையும் பானத்தையும் படைத்தவனாகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] "மஹத் என்று சொல்லப்படுவது உயர்ந்தது அல்லது பெரியது என்ற பொருளைத் தரும். எனவே, மஹாபாரதம் என்பது பாரதர்களின் பெரும் வரலாறு அல்லது உயர்ந்த வரலாறு என்ற பொருளைப் பெறும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[3] "நிருக்தம் என்பது வேதங்களில் உள்ள சிறப்புச் சொற்களின் விளக்கங்களாலும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "இது மஹத்தாக இருப்பதினாலும், பாரமுள்ளதாக இருப்பதினாலும் மஹாபாரதமென்று சொல்லப்படுகிறது. இதனுடைய நிருக்தத்தை எவன் அறிகிறானோ அவன் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான்" என்றிருக்கிறது. மஹத் என்பதன் அடிக்குறிப்பில், "பெரிதாக இருப்பது" என்றும், பாரமுள்ளதாக என்பதன் அடிக்குறிப்பில், "கௌரவமுள்ளது" என்றும், நிறுக்தன் என்பதன் அடிக்குறிப்பில், "பெயரின் உறுப்புகளைப் பிரித்துப் பொருள் சொல்வது" என்றும் இருக்கின்றன.

[4] கும்பகோணம் பதிப்பில் இதன்பிறகு இன்னும் இருக்கிறது. கங்குலியில் பின்வருவது இல்லை. கும்பகோணம் பதிப்பில் "பதினெட்டு புராணங்களும், எல்லாத் தர்மசாஸ்திரங்களும், அங்கங்களுடன் கூடின வேதங்களும் ஒரு தட்டிலும், பாரதம் ஒரு தட்டிலும் இருக்கின்றன. மஹாத்மாவும், பதினெட்டுப் புராணங்களையும் செய்தவரும், வேதத்திற்குப் பெருங்கடலாயிருப்பவருமான அந்த முனிவருடைய இந்த ஸிம்மநாதமானது கேட்கப்படட்டும். பிரபுவும், பகவானுமான வியாஸ முனிவர், சிறந்ததும், புண்யமுமான இந்தப் பாரதம் முழுதினையும் மூன்று வருஷங்களில் செய்தார். ஜயமென்று பெயருள்ள (இந்த) மஹாபாரதத்தை எப்பொழுதும் பக்தியுடன் கேட்டால் அவனுக்குச் செல்வமும், புகழும், கல்வியும் எப்பொழுதும் சேர்ந்தே உண்டாகின்றன. பரதஸ்ரேஷ்டரே, அறம், பொருள், இன்பம் வீடுகளைப் பற்றி இதில் உள்ளதுதான் மற்றதிலும் இருக்கின்றது. இதில் இல்லாதது ஓரிடத்திலும் இல்லை. ஜயமென்று பெயருள்ள மஹாபாரதமானது எப்பொழுதும் எவ்விடத்தில் படிக்கப்படுகிறதோ அவ்விடத்தில் ஸ்ரீயும், கீர்த்தியும், வித்தையும், எப்பொழுதும் ஸந்தோஷமாகிருக்கின்றன. அக்காலத்தில் ஜனமேஜயர் முதலான அரசர்களும், ஆஸ்திகர் முதலான பிராம்மணர்களும் தர்மத்தத்தன் முதலான வைஸ்யர்களும், ஸோம்யவம்ஸ்யன் முதலான சூத்திரர்களும், பாரதத்தைச் சொல்லுகின்றவரும், பிரம்மரிஷியும், மஹாகுருவுமான வைசம்பாயனரைப் பொற்பீடத்தில் வீற்றிருக்கச் செய்து, மஹா குருவான அவரை லக்ஷம் நிஷ்கங்களாலும், பதினாயிரம் நிஷ்கங்களாலும், ஆயிரம் நிஷ்கங்களாலும், நூறு நிஷ்கங்களாலும், பத்து நிஷ்கங்களாலும் பூஜித்தார்கள். மரித்துப் பிறக்கும் புத்திரனுள்ளவன் பத்து நிஷ்கங்களைக் கொடுத்து மரிக்காத புத்திரனுள்ளவனானான். ஜ்வரம் முதலான வியாதிகளுள்ளவன் நூறு நிஷ்கங்களைக் கொடுத்து வியாதியற்றவனானான். ஸந்ததியில்லாதவன் ஆயிரம் நிஷ்கங்களைக் கொடுத்து புத்திர ஸந்ததியுள்ளவனானான். அவர்கள் ஆயுளையும் ஆரோக்கியத்தையும், ஐஸ்வரியத்தையும், அன்னத்தையும், புத்திரர்களையும் அடைந்தார்கள். ஸுவர்ணத்தையும், வெள்ளியையும், ரத்தினத்தையும் எல்லா ஆபரணங்களையும், எல்லா ஸாமக்ரிகளோடுங்கூடினதும், புதையலுடன், பொக்கசத்துடனும் கூடினதும், செங்கல்லுகளாலாகிய சுவர்களுடன் கூடினதும் அக்னி பாதை முதலானவை அற்றதும், தேவர்களைப் பூஜிப்பதற்கும், அக்னிஹோத்ரம் முதலானவை செய்வதற்கும் படிப்பதற்குமுள்ள வீடுகளுள்ளதும், உள்ளிலும், வெளியிலும் மதில்களுள்ளதும் உப்பரிகைகளுடன் கூடினதும் கோசாலைகளுடன் கூடினதுமான வீட்டை ஸ்வர்க்காரோஹண பர்வத்தைக் கேட்குங்காலத்தில் தனித்தனியாகவாவது, சேர்த்தாவது கொடுக்க வேண்டும். மோக்ஷத்தில் விருப்பமுள்ளவனாகக் கொடுத்தால், (அவனுக்கு) மறுபடியும் பிறப்பில்லை. ஆசையுள்ளவனாக இருந்தால் பிரம்ம கல்பம் வரையில் பிரம்மாவின் கிருஹத்தில் ஸுகமாக வஸிப்பான். புராணத்தின் முகமாக வேதந்தஜ்ஞானமானது அடையப்படுகிறது. ஆகையினால், அவர் குருவென்று சொல்லப்பட்டார். அவரைப் பூஜிப்பது ஈஷ்வர பூஜையாகும். பாரதத்தைச் சொல்லுகின்றவனையும், கேட்பவர்களையும், எழுதுகின்றவர்களையும், ஸித்தர்களும், பரமரிஷிகளும், மிக்க ஸந்தோஷத்துடன் பூஜிக்கிறார்கள். மஹாபாரதத்தைச் சொல்பவனை இவ்வுலகில் எந்த மனிதர்கள் பூஜிக்கவில்லையோ அவர்களுடைய எல்ல நற்கர்மங்களும் நசித்துவிடும், தேவர்களும் சபிப்பார்கள்" என்றிருக்கிறது.

பிராமணர்கள், மன்னர்கள், கருத்தரித்த பெண்கள் ஆகியோரால் இது படிக்கப்பட வேண்டும். சொர்க்கத்தை அடைய விரும்புபவன் சொர்க்கத்தை அடைவான்; வெற்றியை விரும்புபவன் வெற்றியை அடைவான்.(47) கருத்தரித்த பெண்கள் உயர்ந்த அருளைக் கொண்ட மகனையோ, மகளையோ ஈன்றெடுப்பார்கள். பலமிக்கவரும், திரும்பி வராதவரும், முக்தியின் அவதாரமும், தீவில் பிறந்தவருமான கிருஷ்ணர் {வியாசர்}, அற விளைவுகளுக்குத் துணை புரிய விரும்பி பாரதத்தின் சுருக்கத்தைப் படைத்தார்.(48) அறுபது லட்சம் ஸ்லோகங்களைக் கொண்ட மற்றொரு தொகுப்பையும் அவர் படைத்தார்.(49) இவற்றில் முப்பது லட்சம் ஸ்லோகங்கள் தேவலோகத்தில் வைக்கப்பட்டது. பித்ருக்களின் லோகத்தில் பதினைந்து லட்சம் ஸ்லோகங்கள் இப்போது இருக்கின்றன. அதே வேளையில் பதினைந்து லட்சம் யக்ஷர்களின் உலகில் நடப்பிலுள்ளன.(50) மனிதர்களுக்கு மத்தியில் ஒரு லட்சம் தற்போதிருக்கின்றன. நாரதர் தேவர்களுக்கு மஹாபாரதத்தை உரைத்தார்; அசித தேவலர் பித்ருக்களுக்கும்,(51) சுகர் ராட்சசர்கள் மற்றும் யக்ஷர்களுக்கும், வைசம்பாயனர் மனிதர்களுக்கு மஹாபாரதத்தை உரைத்தனர். இந்த வரலாறு புனிதமானதாகவும், ஆழ்ந்த கருத்துகளை உடையதாகவும், வேதங்களுக்கு நிகரானதாகவும் கருதப்படுகிறது.(52) ஓ! சௌனகரே, ஒரு பிராமணனைத் தன் முன்னிலையில் கொண்டு இந்த வரலாற்றைக் கேட்கும் மனிதன், புகழ் மற்றும் தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையையும் அடைகிறான்.(53) நல்லர்ப்பணிப்புடன் மஹாபாரத உரையைக் கேட்பவன், அதன் மிகச் சிறிய பகுதியைப் புரிந்து கொள்வதன் மூலம் கிட்டும் தகுதியின் விளைவால் உயர்ந்த வெற்றியை அடைகிறான். இந்த வரலாற்றைச் சொல்லும் மனிதனும், அர்ப்பணிப்புடன் கேட்கும் மனிதனும் தங்கள் பாவங்கள் அனைத்தும் கழுவப்படுகின்றனர்.(54,55)

பழங்காலத்தில் பெரும் முனிவரான வியாசர் இந்த ஆய்வைத் தொகுத்து, இந்த நான்கு ஸ்லோகங்களுடன் சேர்த்து தம்முடன் தமது மகன் சுகரையும்  படிக்கச் செய்தார்[5].(56) "ஆயிரக்கணக்கான தாய்மாரும், தந்தைமாரும், நூற்றுக்கணக்கான மகன்களும், மனைவியரும் உலகில் எழுவார்கள், அதிலிருந்து செல்வார்கள். வேறு சிலரும் (எழுந்து) அதே போலச் செல்வார்கள்.(57) இன்பந்தரும் ஆயிரக்கணக்கான தருணங்களும், அச்சந்தரும் நூற்றுக்கணக்கான தருணங்களும் நேரலாம். இவை அறியாமையில் இருப்பவனைப் பாதிக்குமேயன்றி ஞானியையல்ல.(58) உயர்த்தப்பட்ட கரங்களுடன் நான் உரக்கக் கதறுகிறேன், கேட்பாரெவரும் இல்லை. அறத்தில் இருந்து செல்வமும், செல்வத்திலிருந்து இன்பமும் நேர்கின்றன. எனவே, அறத்தை ஏன் கடைப்பிடிக்கக்கூடாது?(59) இன்பத்திற்காகவோ, அச்சத்திற்காகவோ, பேராசைக்காகவோ ஒருபோதும் ஒருவன் அறத்தைக் கைவிடக்கூடாது. உண்மையில் உயிரின் நிமித்தமாகவும் ஒருவன் அறத்தை ஒருபோதும் கைவிடக்கூடாது. அறமே நிலையானது. இன்பதுன்பங்கள் நிலையானவையல்ல. ஜீவன் நிலையானவன். எனினும், உடலில் ஜீவன் பொதியப்படுவதற்கான காரணம் {உடலுடன் கூடிய ஜீவன்} அவ்வாறானதல்ல" {என்ற ஸ்லோகங்களை வியாசர் தம்முடன் சேர்ந்து சுகரையும் படிக்கச் செய்தார்}.(60)

[5] அந்த நான்கு சுலோகங்களும் 57, 58, 59, 60 ஆகிய ஸ்லோகங்களில் வருகின்றன. பம்பாய் பதிப்பு மற்றும் வங்கப்பதிப்பின் உரைகளுக்கிடையில் சிறு வேறுபாடு இருக்கிறது. ஆனால் அந்த வேறுபாடுகளைக் கவனமாகக் கருத்தில் கொண்ட எனக்கு வங்க உரைகளே உண்மைத் தன்மையுடன் இருப்பது தெரிகிறது. இதில் எனக்கு ஐயமில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அந்த மனிதன் விடியலில் எழுந்ததும், {மேற்கண்ட} இந்தப் பாரதச் சாவித்ரியைப் படிப்பானோ[6] அவன் இந்த வரலாற்றை உரைப்பதுடன் தொடர்புடைய வெகுமதிகளை அனைத்தையும் அடைந்து இறுதியாக உயர்ந்த பிரம்மத்தை அடைவான்.(61) புனிதமான பெருங்கடல், இமய மலை ஆகிய இரண்டும் விலைமதிப்புமிக்க ரத்தினங்களின் சுரங்கங்களாகக் கருதப்படுவதைப் போலவே பாரதமும் (விலைமதிப்புமிக்க ரத்தினங்களைக் கொண்ட சுரங்கமாகவே) கருதப்படுகிறது.(62) கல்விமானான மனிதன், (தீவில் பிறந்த) கிருஷ்ணரால் {வியாசரால்} தொகுக்கப்பட்ட இந்த வேதத்தையோ, ஆகமத்தையோ பிறருக்கு உரைப்பதன் மூலம் செல்வத்தை ஈட்டுவான். குவிந்த கவனத்துடன் பாரதம் என்ற இந்த வரலாற்றை உரைக்கும் மனிதன் நிச்சயம் உயர்ந்த வெற்றியை அடைவான்.(63) எனில், புஷ்கரையில் நீர் தெளித்துக் கொண்டு, பாரதம் உரைக்கப்படும் போது கவனமாகக் கேட்கும் மனிதனைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இது தீவில் பிறந்தவரின் உதடுகளில் இருந்து சிந்திய அமுதத்திற்கு ஒப்பானது. இஃது அளக்க முடியாததாகவும், புனிதமானதாகவும், புனிதப்படுத்துவதாகவும், பாவம் போக்குவதாகவும், மங்கலமானதாகவும் இருக்கிறது" {என்றார் சௌதி}.(64)

[6] "சாவித்ரி என்பது காயத்ரியைப் போன்று புனிதமான ஒன்றாகும். காயத்ரி என்பது வேதங்களில் உள்ள புனிதமான மந்திரமாகும். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு ஸ்லோகங்களும் பாரதத்தின் "சாவித்ரி" அல்லது "காயத்ரி" ஆகும். அவற்றை {அந்த நான்கு ஸ்லோகங்களையும்} பாராயணம் செய்வது {உரைப்பது}, மொத்த தொகுப்பையும் {முழு மஹாபாரதத்தையும்} பாராயணம் செய்ததற்கு நிகராகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 5ல் உள்ள சுலோகங்கள் : 64


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரத ஸ்ரவணவிதி! - ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 6

மகாபாரதம், Mahabharatham in Tamil, மஹாபாரதம், Tamil Mahabharata





மஹாபாரத ஸ்ரவணவிதி! - ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 6

Oridnances for listening Mahabharata! | Svargarohanika-Parva-Section-6 | Mahabharata In Tamil


பதிவின் சுருக்கம் : மஹாபாரதம் உரைக்கும்போது கேட்பதற்குரிய விதி முறைகள்; மஹாபாரதம் கேட்ட பிறகு கொடுக்கப்பட வேண்டிய சிராத்த காணிக்கைகள்; மஹாபாரதப் பாராயணத்தைக் கேட்ட பிறகு பொதுவாகக் கொடுக்கப்பட வேண்டிய கொடைகள்; பாராயணம் செய்பவருக்குரிய தகுதிகள்; பாராயணம் செய்ய வேண்டிய முறை; ஒவ்வொரு பாராயணத்தின் முடிவிலும் கிட்டும் பலன்கள்; ஒவ்வொரு பர்வத்தின் நிறைவிலும் கொடுக்கப்பட வேண்டிய கொடைகள்; மஹாபாரதத்தின் புண்ணியங்கள்; மஹாபாரதத்தைக் கேட்பதன் மூலம் கொடும்பாவங்களில் இருந்தும் தூய்மையடையலாம் என்பது...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! புனிதமானவரே, கல்விமான்கள் எந்தச் சடங்குகளின்படி பாரதத்தைக் கேட்க வேண்டும். (பாரதத்தைக் கேட்பதன் மூலம் அடையப்படும்) கனிகள் பலன்கள் என்னென்ன? பல்வேறு பாரணங்களின் {உண்ணா நோன்பிருந்து உண்ணும்} போது வழிபடப்பட வேண்டிய தேவர்கள் யாவர்?(1) ஓ! புனிதமானவரே, ஒவ்வொரு பர்வத்தின் போதும், அல்லது (பாராயணம் தொடர்கையில் வரும்) புனித நாளின் போதும் ஒருவன் கொடுக்க வேண்டிய கொடைகள் என்னென்ன? பாராயணம் செய்பவரின் தகுதிகள் என்ன? இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக[1]" என்றான்.(2)


[1] "ஒரு பர்வம் என்பது ஒரு புனித நாளாகும், பொதுவாக இது முழு நிலவு {பௌர்ணமி}, புது நிலவு {அமாவாசை} நாட்கள் அவ்வாறு அழைக்கப்படுகின்றன.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! மன்னா, ஓ! பாரதா, அதன் நடைமுறை என்ன என்பதையும், (பாரதம் உரைக்கப்படும்போது) கேட்பவனுக்குக் கிடைக்கும் கனிகள் {பலன்கள்} என்னென்ன என்பதையும் கேட்பாயாக. ஓ! மன்னர்களின் மன்னா {ஜனமேஜயா}, இதையே நீ என்னிடம் கேட்டாய்.(3) ஓ! பூமியின் ஆட்சியாளா, சொர்க்கத்தின் தேவர்கள் விளையாடுவதற்காக {தெய்வசெயல் புரிவதற்காக} இந்த உலகத்திற்கு வந்தனர். தங்கள் பணியை முடித்துக் கொண்டு அவர்கள் மீண்டும் சொர்க்கத்திற்குச் சென்றனர்.(4) நான் உனக்குச் சுருக்கமாகச் சொல்லப் போவதைக் கேட்பாயாக. மஹாபாரதத்தில் முனிவர்களின் பிறப்பு மற்றும் பூமியில் வந்த தேவர்களின் பிறப்பு ஆகியவை காணக்கிடைக்கின்றன.(5) ஓ! பாரதக் குலத்தோனே, பாரதம் என்றழைக்கப்படும் இந்த ஆய்வில் நித்தியமான ருத்திரர்கள், சாத்யர்கள், விஷ்வேதேவர்கள், ஆதித்யர்கள், அஸ்வினிகள் என்றழைக்கப்படும் இரு தேவர்கள், லோகபாலர்கள், பெரும் முனிவர்கள், குஹ்யர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், வித்யாதரர்கள், சித்தர்கள், பல்வேறு தேவர்கள், உடலில் புலப்படும் சுயம்பு, தவசிகள் பலர், மலைகள், குன்றுகள், பெருங்கடல்கள், கடல்கள், ஆறுகள், பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த அப்சரஸ்கள், கோள்கள், வருடங்கள், அயனங்கள் {அரை வருடங்கள்}, பருவ காலங்கள், அசையும் மற்றும் அசையாத பொருட்களுடன் கூடியதும், தேவர்கள் மற்றும் அசுரர்களுடன் கூடியதுமான மொத்த அண்டமும் ஓரிடத்தில் காணக்கிடைக்கின்றன.(6-9)

ஒரு மனிதன் பயங்கரப் பாவங்களைச் செய்தவனாக இருந்தாலும், இதில் சொல்லப்படும் அவர்களின் {மேற்கண்டவர்களின்} பெயர்கள், சாதனைகள், புகழ் ஆகியவற்றைக் கேட்பதன் மூலம், அவற்றில் இருந்து தூய்மையடைகிறான்.(10) ஓ! பாரதா {ஜனமேஜயா}, குவிந்த ஆன்மாவுடனும், தூய உடலுடனும் இந்த வரலாற்றைத் தொடக்கம் முதல் முடிவு வரை முறையாகக் கேட்ட ஒருவன், (அதில் குறிப்பிடப்படும் முதன்மையான மனிதர்களுக்கு) சிராத்தக் காணிக்கைகளை அளிக்க வேண்டும். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, தன் சக்திக்கு தகுந்த படி பிராமணர்களுக்கும் பிராமணர்களுக்கும் அர்ப்பணிப்புடன் கொடைகளை அளிக்க வேண்டும்.(11,12) பல்வேறு வகை ரத்தினங்கள், பசுக்கள், பசுக்களில் பால் கறப்பதற்கான வெண்கலப் பாத்திரங்கள், அனுபவிக்கத்தகுந்த அனைத்து வகைச் சாதனைகளையும் கொண்டவர்களும், அனைத்து வகை ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான கன்னிகைள், பல்வேறு வகையான வாகனங்கள், அழகிய மாளிகைகள், நிலங்கள் மற்றும் துணிகள் ஆகியனவும் காணிக்கை அளிக்கப்பட வேண்டும்.(13,14) குதிரைகள், மதப்பெருக்குள்ள யானைகள் உள்ளிட்ட விலங்குகளும், படுக்கைகள், மனிதர்களின் தோள்களில் சுமக்கப்படும் பல்லக்குகள், நன்கு அலங்கரிக்கப்பட்ட தேர்கள் ஆகியவையும் கொடை அளிக்கப்பட வேண்டும்.(15) வீட்டிற்குரிய எந்தப் பொருளிலும் முதன்மையானவையும், பெரும் மதிப்புமிக்கச் செல்வமும் பிராமணர்களுக்குக் கொடையளிக்கப்பட வேண்டும். உண்மையில், ஒருவன் தன்னையும், மனைவிகளையும், பிள்ளைகளையும் கொடையளிக்க வேண்டும்.(16)

பாரதத்தைக் கேட்க விரும்பும் ஒருவன், ஐயுணர்வு இல்லாத இதயத்துடனும், உற்சாகத்துடனும், இன்பமாகவும் அதைக் கேட்க வேண்டும்; உரையைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, அவன் தன் சக்திக்குத் தகுந்த வகையில் பெரும் அர்ப்பணிப்புடன் கொடைகளைக் கொடுக்க வேண்டும்[2].(17) வாய்மை மற்றும் நேர்மையில் அர்ப்பணிப்புள்ளவனும், தற்கட்டுப்பாடுடையவனும், (மனம்) தூய்மையானவனும், நம்பிக்கையுடன் கூடியவனும், கோபத்தை அடக்கியவனுமான ஒரு மனிதன், (பாரதம் உரைக்கும் காரியத்தின் மூலம்) வெற்றியை எவ்வாறு அடைகிறான் என்பதைக் கேட்பாயாக.(18) அவன் (உடல் அளவில்) தூய்மையானவனும், நல்லொழுக்கம் ஒழுகுபவனும், வெள்ளுடை உடுத்தியவனும், தன் ஆசைகளை முழுமையாக ஆள்பவனும், குற்றங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனும், கல்வியின் பிரிவுகள் அனைத்தையும் அறிந்தவனும், நம்பிக்கையுடன் கூடியவனும், வன்மத்தில் இருந்து விடுபட்டவனும்,(19) நல்ல குணங்களைக் கொண்டவனும், அருள் நிறைந்தவனும், தற்கட்டுப்பாடுடையவனும், வாய்மைநிறைந்தவனும், ஆசைகளைக் கட்டுக்குள் வைத்திருப்பவனும், கொடையளிப்பதால் அனைவராலும் விரும்பப்படுபவனும், கௌரவம் கொண்டவனுமான ஒருவனை உரைப்பவனாக {பாராயணம் செய்பவனாக} நியமிக்க வேண்டும்.(20)

[2] "நான் இந்த ஸ்லோகத்திற்குச் சரியாகப் பொருள் கொண்டிருக்கிறேனா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இந்த நாள்வரை, எந்த மனிதனின் வீட்டில் பாரதம் உரைக்கப்படுகிறதோ, அவன் ஒவ்வொரு நாளும் உரையின் முக்கிய நிலைகளில் கொடைகளை அளிக்கிறான். ஒரு சில தருணங்களை எடுத்துக்காட்டுகளாகச் சொல்வதற்கு, திரௌபதி சுயம்வரப் பகுதி வரும்போது, ஏதோ உரைக்கச் செய்பவரே துருபதன் என்ற வகையில் உரைப்பவருக்கு விலைமதிப்புமிக்கக் கொடைகள் அளிக்கப்படுகின்றன. அதே போலத் துர்வாசரின் பாரணம் {நோன்பு முடிக்கும் நேரம்} வரும்போது, ஏதோ அந்த இல்லரவாசியே அந்தக் கோபக்கார தவசிக்கும் அவரது சீடர்களுக்கு உணவு தயாரிக்கும் மன்னன் யுதிஷ்டிரன் என்பதைப் போல, அனைத்து வகை உணவுகளுடன் கூடிய கொடையை அளிக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். பிபேக்திப்ராயின் பதிப்பில் இந்தப் பகுதி இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில், கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் உள்ளதை அடுத்த அடிக்குறிப்பில் சொல்லியிருக்கிறேன்.

{பாரதம்} உரைப்பவன் {பாராயணம் செய்பவன்}, உடல் கோளாறுகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, சுகமாக அமர்ந்து கொண்டு, குவிந்த கவனத்துடனும், போதுமான சக்தியுடனும், எழுத்துகள், சொற்களுக்குள் குழப்பிக் கொள்ளாமல், இனிய பேச்சுடனும், சொற்களுடனும் கூடியவனாக, உணர்வைக் குறிக்கும் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உரையை மெதுவாகவோ, வேகமாகவோ சொல்லாமல் எழுத்துகள் அமையும் எட்டு இடங்களில் இருந்து அறுபத்துமூன்று எழுத்துகளையும் முழுமையாகச் சொல்ல வேண்டும்.(21,22) நாராயணனையும், மனிதர்களில் முதன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும்.(23) ஓ! மன்னா, பாரதம் உரைக்கப்படும்போது, கேட்கும் இவ்வகையானவன், நோன்புகளை நோற்று, தொடக்கச் சடங்குகளால் தூய்மையடைந்து மதிப்புமிக்கப் பலன்களை அடைகிறான்.(24)

{உண்ணா நோன்பிருந்து உண்ணும்} முதல் பாரணத்தை எட்டும்போது, கேட்பவன், விரும்பத்தக்க பொருட்களைக் கொடுத்துப் பிராமணர்களை நிறைவடையச் செய்ய வேண்டும். இதைச் செய்வதன் மூலம் ஒருவன் அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைகிறான்[3].(25) அவன் தனக்குப் பணிவிடை செய்யக்கூடிய பல்வேறு வகை அப்சரஸ்கள் நிறைந்த ஒரு பெரிய (தெய்வீகத்) தேரை அடைகிறான். மகிழ்ச்சியான இதயத்துடனும், தேவர்களின் துணையுடனும் அவன் (இன்பத்தில்) திளைத்த இதயத்துடன் சொர்க்கத்திற்குச் செல்கிறான்.(26) இரண்டாம் பாரணத்தை எட்டும்போது, கேட்டுக் கொண்டிருப்பவன் அதிராத்ர நோன்பை நோற்றதற்கான பலன்களை அடைகிறான். உண்மையில் அவன் முற்றிலும் விலைமதிப்புமிக்க ரத்தினங்களாலான ஒரு தெய்வீகத் தேரில் உயர்கிறான்.(27) தெய்வீக மலர்மாலைகளையும், ஆடைகளையும் அணிந்து கண்டு, தெய்வீகக் களிம்புளைப் பூசிக் கொண்டு, எப்போதும் தெய்வீக நறுமணத்தைப் பொழிந்தபடியே அவன் சொர்க்கத்தில் உயர்ந்த கௌரவங்களை அடைகிறான்.(28) மூன்றாவது பாரணத்தை எட்டும்போது, அவன் துவாதசாஹ நோன்றை நோற்றதற்கான பலன்களை அடைகிறான். உண்மையில் அவன், ஒரு தேவனைப் போலப் பல வருடங்கள் சொர்க்கத்தில் வசிக்கிறான்.(29)

[3] ஸ்லோகம் எண் 17 முதல் 25 வரையுள்ள செய்தி கும்பகோணம் பதிப்பில், "சுத்தனும், நல்ல ஸ்வபாவமும், ஒழுக்கமுமுள்ளவனும், வெள்ளையாடை உடுத்தவனும், இந்திரியங்களை ஜயித்தவனும், ஸம்ஸ்காரம் பெற்றவனும், எல்லாச் சாஸ்திரங்களையுதம் அறிந்தவனும், ஸ்ரத்தையுள்ளவனும், அஸூயையில்லாதவனும், சிறந்த வடிவமுள்ளவனும், அழகுள்ளவனும், இந்திரியங்களை அடக்கினவனும், ஸத்தியவாதியும் இந்திரியங்களை ஜயித்தவனும், கொடையும், கௌரவமும் பொருந்தியவனுமாக இருப்பவன் சொல்லுகிறவனாகச் செய்யப்படத் தகுந்தவன். சொல்லுகிறவன் கவலையற்றவனும் நன்கு மன அடக்கமுள்ளவனுமாக நன்கு உட்கார்ந்து கொண்டு தாமதமில்லாமலும், ஸ்ரமமில்லாமலும், வேகமில்லாமலும், வித்வான்களால் பூஜிக்கப்பட்டதாகவும், அக்ஷரங்களும், பதங்களும் கலக்காமலும் ஸ்வரத்தோடும், அபிப்பிராயத்தோடும் கூடினதாகவும் அறுபத்துமூன்று அக்ஷரங்களோடு* கூடினதாகவும், எட்டு ஸ்தானங்களின்றும்* உண்டானதாகவும் இருக்கும்படி சொல்ல வேண்டும். நாராயணரையும், நரோத்தமனான நரனையும், ஸரஸ்வதீ தேவியையும், வியாஸரையும் நமஸ்கரித்து, பிறகு, ஜயமென்னும் பாரதத்தைச் சொல்ல வேண்டும். ராஜரே, பாரதரே, கேட்பவன் நியமமுள்ளவனும், சுத்தனுமாக இரந்து கொண்டு இவ்விதமாக இருக்கும் சொல்லுகிறவனிடமிருந்து பாரதத்தைக் கேட்டால் அவன் கேட்டதினாலாகிய பயனை அடைவான். மனிதன் முதன்முறை முடித்தலை அடைந்து பிராம்மணர்களை இஷ்டங்களால் திருப்தியடையும்படி செய்தால், அக்னிஷ்டோமமென்னும் யாகத்தின் பயனை அடைகிறான்" என்றிருக்கிறது. அறுபத்துமூன்று அக்ஷரங்களோடு என்பதன் அடிக்குறிப்பில், "எழுதக்கூடாய 52 அக்ஷரங்களும், எழுதக்கூடாமல் ஒலிவடிவமாக மாத்ரமுள்ள நாதம் முதலிய 11 அக்ஷரங்களும்" என்றிருக்கிறது. எட்டு ஸ்தானங்களினின்றும் என்பதன் அடிக்குறிப்பில், "அக்ஷரங்கள் பிறக்குமிடம் எட்டு. அவை: மார்பு, மிடறு, தலை, நாவினடி, பற்கள், மூக்கு, உதடுகள், மோவாய் என்பன" என்றிருக்கிறது.

நான்காவது பாரணத்தில் அவன் வாஜபேய வேள்வி செய்ததன் பலன்களை அடைகிறான். ஐந்தாவதில் இதற்கும் இரு மடங்கு பலன்களை அடைகிறான். உதயச் சூரியனையோ, சுடர்மிக்க நெருப்பையோ போன்ற ஒரு தெய்வீகத் தேரில் ஏறி, தேவர்களின் துணையுடன் சொர்க்கத்திற்குச் செல்லும் அவன், இந்திரனின் வசிப்பிடத்தில் பல்லாயிரம் ஆண்டுகள் இன்பநிலையில் திளைக்கிறான்.(30,31) ஆறாவது பாரணத்தில் இதனிலும் இரு மடங்கையும், ஏழாவது மும்மடங்கு பலன்களையும் அடைகிறான். (அழகில்) கைலாச மலையின் சிகரத்திற்கு ஒப்பானதும், வைடூரியத்தாலும், வேறு ரத்தினங்களாலும் அமைக்கப்பட்ட பீடங்களைக் கொண்டதும், பல்வேறு வகை அழகிய பொருட்களால் சூழப்பட்டதும், ரத்தினங்கள் மற்றும் பவழங்கள் நிறைந்ததும், செலுத்துபவனின் விருப்பத்திற்கேற்ப நகர்வதும், பணிவிடை செய்வதற்கான அப்சரஸ்கள் நிறைந்ததும், ஒரு தெய்வீவக் தேரில் ஏறும் அவன், இரண்டாவது சூரிய தேவனைப் போல இன்பலோகங்கள் எங்கும் பவனி வருகிறான்.

எட்டாவது பாரணத்தில் அவன் ராஜசூய வேள்வியின் பலன்களை அடைகிறான்.(32-34) உதயச் சந்திரனைப் போன்றதும், சந்திரக்கதிர்களைப் போன்று வெண்மையான குதிரைகள் பூட்டப்பட்டதும், எண்ணத்தின் வேகம் கொண்டதுமான அழகிய தேரில் அவன் ஏறுகிறான்.(35) முதன்மையான அழகைக் கொண்டவர்களும், சந்திரன் போன்ற அழகிய முகங்களைக் கொண்டவர்களுமான பெண்களால் அவன் பணிவிடை செய்யப்படுகிறான். அவர்கள் இடுப்புகளில் வளைந்திருக்கும் மாலைகள் மற்றும் கணுக்கால்களில் வளைந்திருக்கும் நுபுரங்களின் இசையை அவன் கேட்கிறான்.(36) அழகில் விஞ்சிய பெண்களின் மடியில் தலை வைத்து உறங்கி பெரும் புத்துணர்ச்சியுடன் அவன் விழித்தெழுகிறான். ஒன்பதாவது பாரணத்தில், ஓ! பாரதா, அவன் வேள்விகளில் முதன்மையான குதிரை வேள்வியைச் செய்த பலன்களை அடைகிறான்.(37) தங்கத் தூண்களால் ஆதரிக்கப்படும் கூடுகளுடன் கூடியதும், வைடூரியக் கற்களால் அமைக்கப்பட்ட இருக்கையுடன் கூடியதும், அனைத்துப் பக்கங்களில் பசும்பொன்னாலான ஜன்னல்களைக் கொண்டதும், அப்சரஸ்கள், கந்தர்வர்கள் மற்றும் வேறு தேவர்களால் நிறைந்ததுமான தேரில் ஏறி காந்தியில் சுடர்விடுகிறான்.(38) தெய்வீக மாலைகள் மற்றும் ஆடைகள் அணிந்து, தெய்வீகக் களிம்புகள் தரித்துக் கொள்ளும் அவன், தேவர்களைத் துணையாகக் கொண்ட இரண்டாவது தேவனைப் போல அருள்நிலையில் விளையாடுகிறான்.(39,40)

பத்தாவது பாரணத்தை அடைந்து, பிராமணர்களை நிறைவடையச் செய்யும் அவன் எண்ணற்ற கிங்கிணி மணிகளுடன் கூடியதும், கொடிகள் மற்றும் பதாகைகளால் அலங்கரிக்கப்பட்டதும், விலைமதிப்புமிக்க ரத்தினங்களாலான இருக்கையைக் கொண்டதும், வைடூரியத்தாலான வளைவுகளைக் கொண்டதும், தங்க வலைப் பின்னல் கொண்டதும், பவளத்தாலான கோபுரங்களைக் கொண்டதும், நன்றாகப் பாடும் கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்களால் அலங்கரிக்கப்பட்டதும், அறவோர் வசிக்கத் தகுந்ததுமான தேரை அடைகிறான்.(41-43) நெருப்பின் நிறம் கொண்ட கிரீடத்தால் மகுடந்தரித்து, தங்க ஆபரணத்தால் அலங்கரித்துக் கொள்ளும் அவன், தெய்வீக சந்தனக் குழம்பைத் தன் மேனியில் பூசிக்கொண்டு, தெய்வீக மலர்மாலைகள் அணிந்து கொண்டு, பெருங்காந்தியுடன் கூடியவனாக, தேவர்களின் அருளின் மூலம், தெய்வீக உலகங்கள் அனைத்திலும் திரிந்து, தெய்வீகமான இன்ப நுகர் பொருட்கள் அனைத்தையும் அனுபவிக்கிறான்.(44,45)

இவ்வாறாக இருக்கும் அவன் சொர்க்கத்தில் மிக நீண்ட வருடங்கள் உயர்ந்த கௌரவங்களை அடைகிறான். கந்தர்வர்களின் துணையுடன் கூடிய அவன் முழுமையாக இருபத்தோரு வருடங்கள் இந்திரனின் வசிப்பிடத்தில் இந்திரனின் அருளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அவன் ஒவ்வொருநாளும் பேரழகு படைத்த தெய்வீகக் காரிகையருடன் தெய்வீகத் தேர்களையும், வாகனங்களையும் செலுத்திக் கொண்டு தேவர்களின் பல்வேறு உலகங்களின் பவனி வருகிறான். ஓ! மன்னா, அவன் சூரிய தேவன் மற்றும் சந்திரதேவன், சிவன் ஆகியோரின் வசிப்பிடங்களுக்குச் செல்ல இயன்றவனாகிறான். உண்மையில் அவன் விஷ்ணு லோகத்தில் வாழ்வதிலும் வெற்றியடைகிறான். ஓ! ஏகாதிபதி, இஃது இவ்வாறே இருக்கிறது. இதில் எந்த ஐயமும் இல்லை.(46-49) நம்பிக்கையுடன் கேட்கும் மனிதனும் அவ்வாறே ஆகிறான். இதை என் ஆசான் {வியாசர்} சொல்லியிருக்கிறார். இதை உரைப்பவன் விரும்பும் அனைத்துப் பொருட்களும் அவனுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.(50) யானைகள், குதிரைகள், தேர்கள், வாகனங்கள், குறிப்பாக விலங்குகள் மற்றும் அவை இழுக்கும் வண்டிகள், தங்கக் கைவளை, காது வளையங்கள், புனித நூல்கள்,(51) அழகிய ஆடைகள், சிறந்த நறுமணப் பொருட்கள் ஆகியன கொடுக்கப்பட வேண்டும். அவனைத் தேவனாக வழிபடும் ஒருவன் விஷ்ணுலோகத்தை அடைகிறான்.(52)

பாரதம் உரைக்கப்படுகையில், ஒவ்வொரு பர்வத்தையும் அடையும்போது, பிராமணர்களின் பிறப்பு, நாடு, வாய்மை, மகிமை மற்றும் பக்தி ஆகியவற்றை அறிந்து அவர்களுக்கும், அதே போன்றவற்றை அறிந்து கொண்டு க்ஷத்திரியர்களுக்கும் என்னென்ன கொடுக்கப்பட வேண்டும் என்பதை நான் இனி அறிவிக்கப் போகிறேன்[4].(53,54) பிராமணர்களை ஆசி கூறச் செய்து பிறகு உரைக்கும் தொழில் {பாராயணம்} தொடங்கப்பட வேண்டும். ஒரு பர்வம் முடிவடைந்ததும், ஒருவனுடைய சக்திக்குத் தகுந்த வகையில் பிராமணர்கள் வழிபடப்பட வேண்டும்.(55) முதலில் உரைப்பவர், ஓ! மன்னா {ஜனமேஜயா}, வெள்ளாடை அணிந்து, சந்தனக் குழம்பைப் பூசிக் கொண்டு, தேன் மற்றும் பாயஸம்[5] உண்டிருக்க வேண்டும்.(56)

ஆஸ்தீக பர்வம்<1> உரைக்கப்படும்போது, பிராமணர்களுக்குக் கனிகளும், கிழங்குகளும், பாயஸமும், தேனும், தெளிந்த நெய்யும், பாயஸமும் கொடுக்கப்பட வேண்டும்.(57)

சபா பர்வம்<2> உரைக்கப்படும்போது, ஓ! மன்னா, பிராமணர்கள் உண்பதற்கு அபூபங்கள், பூபங்கள் மற்றும் மோதகங்களுடன் கூடிய ஹவிஷ்யம் கொடுக்கப்பட வேண்டும்[6].(58)

[4] "அச்சடிக்கப்பட்ட உரைகள் அனைத்திலும் "க்ஷத்திரியானாம்" என்பது இரண்டம் வரியில் இருக்கிறது. எனினும், கொடைகளைப் பிராணர்களுக்குக் கொடுக்க வேண்டுமேயன்றி க்ஷத்திரியர்களுக்கில்லை. ஏனெனில் க்ஷத்திரியர்கள் கொடையேற்பது அங்கீகரிக்கப்படவில்லை. அதைத் தவிர, பின்வரும் ஸ்லோகத்தில் பிராமணர்களுக்கே குறிப்பாகக் கொடைகள் அறிவிக்கப்படுகின்றன. க்ஷத்திரியர்களுக்குக் கொடை கொடுக்க வேண்டும் என்ற எந்தக் கடப்பாடும் கிடையாது. இந்த இடத்தில் உண்மையான உரை ஏதோ சிதைந்திருக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[5] கோதுமை, பால், சர்க்கரை கலந்த லவங்க மணம் கொண்ட சிறந்த வகைப் பானம்.

[6] "ஹவிஷ்யம் என்பது அரிசி, பால் மற்றும் சர்க்கரை கொண்ட ஓர் உணவாகும். இஃது எவ்வகை இறைச்சியுமில்லாத உணவாகும். அபூபங்கள் என்பது கோதுமை மாவாலான பிண்டங்களாகும். பூபங்கள் என்பன அரிசி மாவாலான பிண்டங்கள், மோதகங்கள் என்பன ஒரு வகைத் தின்பண்டங்களாகும்"எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஆரண்யக பர்வம்<3> உரைக்கப்படும்போது, மேன்மையான பிராமணர்கள் உண்பதற்குக் கனிகளும், கிழங்குகளும் கொடுக்கப்பட வேண்டும்.

ஆரண்யப் பர்வத்தை<4> அடையும்போது, நீர் நிறைந்த நீர்க்குடங்களைக் கொடையளிக்க வேண்டும்.(59) அரிசி, கனிகள், கிழங்குகள், ஏற்புடைய குணம் கொண்ட உணவுகளும் பல மேன்மையான வகைகளைச் சேர்ந்த இனிய உணவும் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.(60)

விராட பர்வம்<5> உரைக்கப்படும்போது, பல்வேறு வகை ஆடைகள் கொடையளிக்கப்பட வேண்டும். ஓ! பாரதர்களின் தலைவா {ஜனமேஜயா},

உத்யோக பர்வத்தின்<6> போது, இரு பிறப்பாளர்களை {பிராமணர்களை} நறுமணப் பொருட்களாலும், மாலைகளாலும் அலங்கரித்து ஏற்புடைய குணம் கொண்ட அனைத்து வகை உணவுகளையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

பீஷ்ம பர்வம்<7> உரைக்கப்படும்போது,  ஓ! மன்னர்களின் மன்னா, அவர்களுக்குச் |{பிராமணர்களுக்குச்} சிறந்த தேர்களையும், வாகனங்களையும் கொடுத்துவிட்டு,(61,62) தூய்மையானதும், நன்கு சமைக்கப்பட்டதும், விரும்பத்தக்க ஒவ்வொரு குணமும் கொண்ட உணவைக் கொடுக்க வேண்டும்.

துரோண பர்வத்தின்<8> போது, கல்விமான்களான பிராமணர்களுக்கு,(63) ஓ! ஏகாதிபதி மேன்மையான வகை உணவையும், படுக்கைகளையும், வில் மற்றும் நல்ல வாள்களையும் கொடுக்க வேண்டும்.

கர்ண பர்வம்<9> உரைக்கப்படும்போது, முதன்மையான வகையைச் சார்ந்ததும்,(64) தூய்மையானதும், இல்லறத்தானால் குவிந்த மனத்துடன் நன்கு சமைக்கப்பட்டதுமான உணவை பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

சல்லிய பர்வம்<10> உரைக்கப்படும்போது, ஓ! மன்னர்களின் மன்னா, பண்டங்களையும், பாயஸத்தையும், கோதுமையால் செய்யப்பட்ட பிண்டங்களையும், இனிய சத்தான உணவு மற்றும் பானங்களையும் கொடுக்க வேண்டும்.

கதா {கதாயுத்த} பர்வத்தின்<11> போது, முத்கம்[7] கலந்த உணவைக் கொடுத்துப் பிராமணர்களை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும்.(65,66)

[7] "முத்கம் என்பது உளுந்தாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஸ்திரீ பர்வம்<12> உரைக்கப்படும்போது, முதன்மையான பிராமணர்களுக்கு ரத்தினங்களும், விலைமதிப்புமிக்கக் கற்களும் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும்.

ஐஷீக பர்வம்[8]<13> உரைக்கப்படும்போது, நெய்யில் கொதிக்க வைக்கப்பட்ட அரிசி முதலில் கொடுக்கப்பட வேண்டும்(67), அதன் பிறகு தூய்மையானதும், நன்கு சமைக்கப்பட்டதும், விரும்பத்தக்க குணங்கள் அனைத்தையும் கொண்டதுமான உணவைக் கொடுக்க வேண்டும்.

சாந்தி பர்வம்<14> உரைக்கப்படும்போது, பிராமணர்கள் உண்பதற்கு ஹவிஷ்யம் கொடுக்கப்பட வேண்டும்.(68)

அஸ்வமேதிக பர்வத்தை<15> அடையும்போது, ஏற்புடைய அனைத்து குணங்களையும் கொண்ட உணவு கொடுக்கப்படவேண்டும்,

ஆஸ்ரமவாஸிக பர்வத்தை<16> அடையும்போது, பிராமணர்களுக்கு ஹவிஷ்யம் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும்.(69)

மௌஸலம்<17> அடையும்போது, நறுமணப் பொருட்களையும், ஏற்புடைய குணங்களைக் கொண்ட மலர்மாலைகளையும் கொடையளிக்க வேண்டும்.

மஹாப்ரஸ்தானிகத்தின்<18> போதும், ஏற்புடைய குணங்களைக் கொண்ட அதே வகைக் கொடைகளை அளிக்க வேண்டும்.(70)

ஸ்வர்க்க பர்வத்தை<19> அடையும்போது, பிராமணர்கள் உண்பதற்கு ஹவிஷ்யம் கொடுக்கப்பட வேண்டும்.

ஹரிவம்சத்தின்<20> முடிவில் ஓராயிரம் பிராமணர்களுக்கு உணவளிக்கப்பட வேண்டும்.(71) அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பசுவையும், சிறிதளவு பொன்னும் கொடுக்கப்பட வேண்டும். ஓ! மன்னா, இவற்றில் பாதியளவை ஒவ்வொரு ஏழைக்கும் கொடுக்கப்பட வேண்டும்.(72)

[8] ஐஷீக பர்வம், ஸ்திரீ பர்வத்திற்கு முன்பு வருவதாகும்.

அனைத்துப் பர்வங்களின் முடிவில் ஞானம் கொண்ட ஓர் இல்லறத்தான், சிறிதளவு பொன்னுடன் ஒரு மஹாபாரதப் பிரதியை அதை உரைத்தவனுக்குக் கொடுக்க வேண்டும்.(73) ஓ! மன்னா, ஹரிவம்ச பர்வம் உரைக்கப்படும்போது, அடுத்தடுத்த பாரணங்களின் போது பிராமணர்கள் பருகுவதற்குப் பாயஸம் கொடுக்கப்பட வேண்டும்.(74) சாத்திரங்களை அறிந்த ஒருவன், அனைத்துப் பர்வங்களையும் முடித்துவிட்டு, தன்னை முறையாகத் தூய்மைப்படுத்தி, வெள்ளுடை உடுத்தி, மலர்மாலைகள் சூடி, ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு, ஒரு மங்கலமான இடத்தில் மஹாபாரதப் பிரதியை வைத்து, அதைப் பட்டுத் துணியால் மூடி, நறுமணப் பொருட்கள், மற்றும் மலர் மாலைகளைக் கொண்டு உரிய சடங்குகளின் படி அதை வழிபட வேண்டும்.(75,76) உண்மையில், இந்த ஆய்வின் பல்வேறு பகுதிகளும் ஒருவனால் அர்ப்பணிப்புடனும், குவிந்த மனத்துடனும் வழிபடப்பட வேண்டும். பல்வேறு வகை உணவுகள், மலர்மாலைகள், பானங்கள் மற்றும் அனுபவிக்கத்தகுந்த பல்வேறு மங்கலப் பொருட்கள் ஆகியவற்றையும் காணிக்கையளிக்க வேண்டும்.(77) பொன்னும், வேறு விலைமதிப்புமிக்க உலோகங்களும் தக்ஷிணையாகக் கொடுக்கப்பட வேண்டும். தேவர்கள் அனைவரின் பெயர்களும், நரன் மற்றும் நாராயணனின் பெயர்களும் சொல்லப்பட வேண்டும்.(78) பிறகு, சில முதன்மையான பிராமணர்களின் மேனியை நறுமணப் பொருட்களாலும், மலர்மாலைகளாலும் அலங்கரித்து, அவர்களுக்கு அனுபவிக்கத்தகுந்த பல்வேறு பொருட்களையும், மேன்மையான விலைமதிப்புமிக்கப் பொருட்களையும் கொடுத்து நிறைவடையச் செய்ய வேண்டும்.(79) இதைச் செய்வதன் மூலம் ஒருவன் அதிராத்ர வேள்வி செய்த பலன்களை அடைகிறான் உண்மையில், அடுத்தடுத்த ஒவ்வொரு பர்வத்தின் போதும், வேள்வி செய்வதால் உண்டாகும் புண்ணியங்களை அவன் அடைகிறான்.(80)

ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, உரைப்பவர், கல்விமானாகவும், நல்ல குரல் கொண்டவராகவும், எழுத்துகள், சொற்கள் ஆகிய இரண்டையும் தெளிவாக உச்சரிப்பவராகவும் இருக்க வேண்டும். ஓ! பாரதர்களின் தலைவா, அத்தகைய மனிதன் ஒவ்வொருவனும் பாரதம் உரைக்க வேண்டும்.(81) பெரும் எண்ணிக்கையிலான முதன்மையான பிராமணர்களை மகிழ்ச்சியடையச் செய்து, விதிப்படியான கொடைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். ஓ! பாரதர்களின் தலைவா, உரைப்பவரும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு முழுமையாக உண்ணக் கொடுக்கப்பட வேண்டும்.(82) உரைப்பவர் நிறைவடைந்தால், அந்த இல்லறத்தான், சிறந்த மங்கலமான மனநிறைவை அடைகிறான். பிராமணர்கள் நிறைவடையச் செய்யப்பட்டால், தேவர்கள் அனைவரும் நிறைவடைகின்றனர்.(83) அதன்பிறகு, ஓ! பாரதர்களின் தலைவா, அனுபவிக்கத்தகுந்த பல்வேறு மேன்மையான பொருட்களால் பிராமணர்கள் முறையாக மகிழ்ச்சியடையச் செய்யப்பட வேண்டும்.(84)

இவ்வாறே, ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, உன் கேள்விகளுக்குப் பதிலாக (இந்தச் சாத்திரங்களை உரைக்கும் வழிமுறைக்கு) உரிய விதிமுறைகளைக் குறிப்பிட்டேன். நீ இவற்றை நம்பிக்கையுடன் கடைப்பிடிக்க வேண்டும்.(85) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பாரதம் உரைக்கப்படுவதைக் கேட்கும்போது, ஒவ்வொரு பாரணத்திலும் ஒருவன் உயர்ந்த நன்மையை அடைய விரும்பி பெருங் கவனத்துடன் கேட்க வேண்டும்.(86) ஒருவன் ஒவ்வொரு நாளும் பாரதத்தைக் கேட்க வேண்டும். ஒருவன் ஒவ்வொரு நாளும் பாரதத்தின் புண்ணியங்களை அறிவிக்க வேண்டும். எவனுடைய வீட்டில் பாரதம் உரைக்கப்படுகிறதோ, அவன் தன்னுடைய கரங்களில் ஜெயம் என்ற பெயரில் அறியப்படும் சாத்திரங்கள் அனைத்தையும் கொண்டிருப்பான்[9].(87) பாரதம் பாவம் போக்குவதும், புனிதமானதுமாகும். பாரதத்தில் பல்வேறு தத்துவங்கள் இருக்கின்றன. பாரதம் தேவர்களாலேயே வழிபடப்படுகிறது. பாரதம் உயர்ந்த இலக்காகும்.(88) ஓ! பாரதர்களின் தலைவா, பாரதம் சாத்திரங்கள் அனைத்திலும் முதன்மையானதாகும். ஒருவன் பாரதத்தின் மூலம் முக்தியை {மோட்சத்தை} அடைகிறான். நான் உனக்குச் சொல்லும் இது முற்றான உண்மையாகும்.(89) மஹாபாரதம் என்றழைக்கப்படும் இந்த வரலாற்றின் புண்ணியங்களையும், பூமி, பசு, {வாக்கின் தேவியான} சரஸ்வதி, பிராமணர், கேசவன் ஆகியோரின் புண்ணியங்களையும் அறிவிக்கும் ஒருவன், ஒருபோதும் சோர்வடைய மாட்டான்.(90)

[9] "ஜெயம் என்பது குறிப்பிட்ட சாத்திரங்களுக்குக் கொடுக்கப்படும் பெயராகும். பாரதம் அந்தச் சாத்திரங்களுக்கு இணையானதாகும். எனவே, ஒருவன் தன் வீட்டில் பாரதத்தை வைத்திருந்தால், அவன் ஜெயம் என்ற பெயரில் அறியப்படும் சாத்திரங்கள் அனைத்தையும் கொண்டிருப்பவனாகக் கருதப்படுவான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, வேதம், இராமாயணம், புனித பாரதம் ஆகியவற்றில் தொடக்கம், நடு மற்றும் இறுதியில் ஹரியே பாடப்படுகிறான்.(91) விஷ்ணு மற்றும் நித்திய ஸ்ருதிகள் தொடர்புடைய சிறந்த வாக்கியங்கள் எதில் நேர்கின்றனவோ, {அவை} உயர்ந்த இலக்கை அடைய விரும்பும் மனிதர்களால் கேட்கப்பட வேண்டும்.(92) புனிதப்படுத்துவதான இது, கடமைகள் குறித்த அடையாளங்காட்டும் உயர்ந்த ஆய்வாகும். இஃது அனைத்துப் புண்ணியங்களையும் கொண்டதாகும். செழிப்பை விரும்பும் ஒருவன் இதைக் கேட்க வேண்டும்.(93) உடலால் இழைக்கப்பட்ட பாவங்களும், சொல் மற்றும் மனத்தால் இழைக்கப்பட்ட பாவங்கள் அனைத்தும் சூரிய உதயத்தின் போது இருளைப் போல (பாரதம் கேட்பதன் மூலம்) அழிவை அடைகின்றன.(94) விஷ்ணுவிடம் பக்தி கொண்ட ஒருவன், இந்தப் பதினெட்டுப் புராணங்களைக் கேட்பதன் மூலம் அடையப்படும் புண்ணியத்தை (இதன் மூலம்) அடைகிறான். இதில் ஐயமேதும் இல்லை.(95) (இதைக் கேட்பதன் மூலம்) ஆண்களும் பெண்களும் விஷ்ணுவின் நிலையை நிச்சயம் அடைவார்கள். பிள்ளைகளை விரும்பும் பெண்கள், விஷ்ணுவின் புகழை அறிவிக்கும் இதை நிச்சயம் கேட்க வேண்டும்.(96)

பாரதம் உரைப்பதால் உண்டாகும் பலனை அடைய விரும்பும் ஒருவன், உரைப்பவருக்குத் தன் சக்திக்கேற்றபடி பொன்னாலான வெகுமானத்தைத் தக்ஷிணையாகக் கொடுக்க வேண்டும்.(97) தன் நன்மையை விரும்பும் ஒருவன், உரைப்பவருக்குத் தங்கக்கவசம் பூண்ட ஒரு கபிலை பசுவையும், துணியால் மறைக்கப்பட்ட அவளது கன்றையும் கொடையளிக்க வேண்டும்.(98) ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, தோள்களுக்கும், காதுகளுக்கும் ஆபரணங்கள் கொடுக்கப்பட வேண்டும். இதையும் தவிர, வேறு வகையான செல்வங்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.(99) ஓ! மனிதர்களின் மன்னா, உரைப்பவருக்கு நிலக் கொடை அளிக்க வேண்டும். வேறெந்த கொடையும் ஒருபோதும் நிலக் கொடை போல் ஆகாது, அல்லது இருக்காது.(100) (பாரதத்தைக்) கேட்பவன் அல்லது பிறருக்கு உரைக்கும் மனிதன், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்து, விஷ்ணுவின் நிலையை அடைகிறான்.(101) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, அத்தகைய மனிதன் ஏழு தலைமுறை மூதாதையரையும், தன்னையும், தன் மனைவி மற்றும் மகன்களையும் மீட்கிறான்.(102) ஓ! மன்னா, பாரதம் உரைப்பதை நிறைவு செய்ததும் ஒருவன் பத்துப் பாகங்களுடன் கூடிய ஹோமம் செய்ய வேண்டும்.

இவ்வாறே, ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, உன் முன்னிலையில் நான் அனைத்தையும் சொல்லிவிட்டேன்.(103) இந்தப் பாரதத்தைத் தொடக்கம் முதல் அர்ப்பணிப்புடன் கேட்டு வரும் ஒருவன், பிராமணக் கொலைக் குற்றம் புரிந்தவனாகவோ, ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்தியவனாகவோ, மது பருகுபவனாகவோ, அடுத்தவர் உடைமைகளைக் களவு செய்பவனாகவோ, சூத்திர வகையில் பிறந்தவனாகவோ இருப்பினும் அவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைகிறான்.(104) இருளை அழிக்கும் நாள் சமைப்பவனைப் போலத் தன் பாவங்கள் அனைத்தையும் அழிக்கும் அத்தகைய மனிதன், விஷ்ணுவைப் போலவே, விஷ்ணுவின் உலகில் இன்பத்தில் திளைப்பான்[10]" {என்றார் வைசம்பாயனர்}.(105)

[10] மஹாபாரதத்தைத் தொடங்கும் சௌதி முந்தைய அத்யாயத்திலேயே முடித்துவிட்டார். இறுதிப் பகுதியான இந்த அத்யாயம் ஜனமேஜயன் கேட்பதாகத் தொடங்கி, வைசம்பயனர் சொல்லி முடிப்பதாக முடிகிறது. இது மஹாபாரதப் பாராயணம் மற்றும் ஸ்ரவணத்திற்கான சிறப்பு அத்யாயமாக பின்னர் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

ஸ்வர்க்காரோஹணிகபர்வம் பகுதி – 6ல் உள்ள சுலோகங்கள் : 105

*****ஸ்வர்க்காரோஹணிக பர்வம் முற்றும்*****
***முழு மஹாபாரதம் முற்றிற்று***




ஆங்கிலத்தில் | In Englishhttps://mahabharatham.arasan.info/p/contents-of-mahabharata.html






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக